சூப்பர் சாதனை!நிலவை சுற்றி 9000முறை வட்டமடித்த சந்திரயான்-2.. அடுத்து சந்திரயான்-3தான்.. இஸ்ரோ தகவல்
டெல்லி: சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் -2 விண்கலம் நிலவை 9,000 முறை வெற்றிகரமாகச் வட்டமடித்து ஆய்வு செய்துள்ளதாகவும் சந்திரயான் -2 தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இஸ்ரோ சார்பில் நிலவு Lunar Science எனப்படும் நிலவு குறித்த ஆய்வுகளை விளக்கும் வகையிலான இரண்டு நாள் கருத்தரங்கு இன்று தொடங்கியது.
நிலவின் சுற்றுப்பாதையைச் சுற்றி வரும் சந்திரயான் -2 விண்கலம் தனது செயல்பாடுகளைத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில் இந்த பட்டறை நடத்தப்படுகிறது.
ஷாக்..! கேரளாவை அச்சுறுத்தும் நிபா.. 11 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்.. அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்

9000 முறை
இந்த நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், "இப்போது வரை சந்திரயான்-2 நிலவைச் சுற்றி 9,000க்கும் மேற்பட்ட முறை வட்டமடிட்டித்து தனது ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. சந்திரயான் -2 விண்கலத்தில் உள்ள எட்டு பேலோடுகள் நிலவின் மேற்பரப்பில் இருந்து 100 கிமீ உயரத்தில் நிலவின் தொலைதூர உணர்தலைக் கண்காணித்து வருகிறது.

சந்திரயான் -2 தரவுகள்
சந்திரயான் -2 திட்டத்தின் மூலம் நமக்குக் கிடைக்கும் தரவுகள் அடுத்தகட்ட ஆய்வுகளுக்குப் பெரியளவில் பயன்படும் வகையில் உள்ளது. இந்த தரவுகளை நாட்டிலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தும் வகையில் பொதுவெளியில் நாங்கள் பகிர்ந்துள்ளோம். சந்திரயான் - 3 திட்டம் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சந்திரயான் -2 ஆர்பிட்டாரின் செயல்பாடுகள் அளிக்கும் வகையில் உள்ளது" என்றார்.

சந்திரயான் -2
சந்திரயான்-1 விண்கலத்தின் தொடர்ச்சியாகக் கடந்த 2019 ஜூலை 22ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த சந்திரயான்-2 நிலவின் புவி வட்டப் பாதைக்குள் நுழைந்தது. அதைத்தொடர்ந்து 2019 செப்டம்பர் 7ஆம் தேதி, சந்திரயான்-2இன் lander & rover நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாகக் கடைசி நேரத்தில் கட்டுப்பாட்டை விட்டுச் சென்ற lander & rover நிலவில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் lander & rover சேதமடைந்தாலும் ஆர்பிட்டார் தொடர்ந்து நிலவைச் சுற்றி வட்டமடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான் -3
இதன் தொடர்ச்சியாகச் சந்திரயான் -3 திட்டத்தைத் தொடங்க இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது. இருப்பினும், கொரோனா பாதிப்பு காரணமாகச் சந்திரயான் -3 பணிகள் சில காலம் தடைப்பட்டது. இப்போது அந்தப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில் 2022ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சந்திரயான் -3 விண்ணில் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்திரயான் -2 ஆர்பிட்டார் தற்போது வரை சிறப்பாகச் செயல்பட்டு வருவதால் சந்திரயான் -3இல் தனியாக ஆர்பிட்டார் இருக்காது என இஸ்ரோ தலைவர் சிவன் கடந்த பிப்ரவரி மாதம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.