70 டாலர் எண்ணெய் இறக்குமதி! இந்தியா போட்ட பக்கா ப்ளான்..! நடுநிலை முடிவால் மெகா ஆஃபரை தருமா ரஷ்யா?
டெல்லி : உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பிறகு இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் 40 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிடம் இருந்து வாங்கி உள்ள நிலையில் ரஷ்யா, கச்சா எண்ணெயின் விலையை 70 டாலருக்கும் கீழாக குறைக்க வேண்டும் என இந்தியா விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து 60 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலைத்தன்மை இல்லாமல் இருந்தது.
உக்ரைன் ரஷ்யா போருக்கு முன்னதாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 80 டாலருக்கும் கீழ் ஆகவே இருந்து வந்த நிலையில், போருக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியது. மார்ச் மாத தொடக்கத்தில் 110 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெயின் விலை தற்போது 106.8 டாலராக உள்ளது.
இருமடங்கு உயர்ந்த எண்ணெய் விலை .. கச்சா எண்ணெய்யுடன் போட்டி போடும் நல்லெண்ணெய்.. கலக்கத்தில் மக்கள்!

உக்ரைன் போர்
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து உலகளாவிய எண்ணெய் விலை உயர்ந்துள்ளது, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் சாதனை உச்சத்தைத் தொட்டது. இந்நிலையில் உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக உலக நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. தொடர்ந்து மற்ற நாடுகளுக்கான விற்பனை குறைந்து வருவதால், ரஷ்யா நேரடியாக எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு பெரிய தள்ளுபடியை வழங்கியது.

எண்ணெய் இறக்குமதி
இதனையடுத்து இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்கள் 40 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கியுள்ளன. முன்னதாக எண்ணெய் இறக்குமதி செய்த மற்ற நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து விலகிச் செல்லும் நிலையில், எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு நாடுகள் இந்தியாவுக்கு எதிராக திரும்பும் வாய்ப்புள்ளது. இதனால் ஏற்படும் அபாயத்தை ஈடுசெய்ய, ரஷ்ய எண்ணெயில் மேலும் தள்ளுபடியைப் பெற இந்தியா முயற்சிக்கிறது

மெகா தள்ளுபடி
இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் போது ஒரு பீப்பாய்க்கு 70 டாலருக்கும் குறைவான விலையில் எண்ணெய்யை வழங்க வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. இந்தியா ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தை ரகசியமானவை என்பதால், அடையாளம் கூற வேண்டாம் என கேட்டுக் கொண்ட அதிகாரி ஒருவர் இந்த தகவலை தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தியா அதன் எண்ணெய் தேவையை 85% க்கும் அதிகமாக இறக்குமதி மூலமே பூர்த்தி செய்வது குறிப்பிடத்தக்கது.

நிறைவேறும் கோரிக்கை
ரஷ்யாவுடன் நட்பினை கைவிட்டு விட்டு உக்ரைனுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற மேற்கத்திய நாடுகளின் கோரிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இதுவரை எதிர்த்து வந்துள்ள நிலையில், இந்தியாவின் 70 டாலர் எண்ணெய் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு , அதிக தள்ளுபடியில் கச்சா எண்ணெய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எண்ணெய் மட்டுல்லாமல் ரஷ்ய ஆயுதங்களை இறக்குமதி செய்வதையும் இந்தியா அதிகம் நம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.