"நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்! அதெல்லாம் விட மாட்டோம்.." எல்லை விவகாரத்தில் சீனாவை வார்ன் செய்யும் ஜெய்சங்கர்
டெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. இதனால் இரு தரப்பும் எல்லையில் அதிகளவில் ராணுவத்தைக் குவித்து வருகிறது.
அதிலும் கல்வான் மோதலுக்குப் பின்னர் நிலைமை மேலும் மோசமானது. இந்தியப் பகுதிகளுக்கு மிக அருகிலேயே சீனா பல்வேறு கட்டுமானங்களையும் மேற்கொள்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
லடாக் எல்லையில் சீனாவின் அதிகரிக்கும் உள் கட்டமைப்புகள்- இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

அமைச்சர் ஜெய்சங்கர்
இந்நிலையில், தற்போதைய நிலையை மாற்றவோ அல்லது உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை (எல்ஏசி) மாற்றவோ சீனா மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியையும் இந்தியா அனுமதிக்காது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்தார். எல்லையில் உள்டக்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் சீனாவுக்குப் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

பதிலடி
இந்தியா-சீன எல்லையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே 1993, 1996 ஒப்பந்தங்களை மீறி, கிழக்கு லடாக் எல்லையில் சீனா அதிகளவில் ராணுவத்தை குவித்ததாகவும் அவர் சாடினார். இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றின் நிகழ்ச்சியில் பேசிய ஜெய்சங்கர், "கொரோனா பெருந்தொற்று காலத்திலும் கூட, எல்லைப் பகுதியில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி நாம் அவர்களுக்குப் பதிலடி கொடுத்து வருகிறோம். எல்லைகளில் ரோந்து பணிகளில் ஈடுபடுவது மட்டுமே நாட்டை பாதுகாத்து விடாது.

கல்வான்
சீனா எல்லைப் பகுதியில் அதிக ராணுவத்தைக் குவித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நாமும் ராணுவத்தைக் குவித்தோம். இது எல்லையில் மிகவும் சிக்கலான சூழலை ஏற்படுத்தி உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. எல்லைக்கு மிக அருகே இரு தரப்பு ராணுவமும் இப்போது உள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன்பு கல்வான் பகுதியில் என்ன நடந்ததோ அதேபோல இந்த முறையும் சீனா விதிமுறைகளைப் பின்பற்றுவது இல்லை.

பேச்சுவார்த்தை
இது பேச்சுவார்த்தை மூலம் வீரர்களைத் திரும்பப் பெறும் நிலைக்குக் கொண்டு வரும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. பல பகுதிகளில் பேச்சுவார்த்தை மூலம் சுமுக உறவு ஏற்படுத்தப்பட்டு, வீரர்கள் வாபஸ் பெறப்பட்டு உள்ளனர். இந்த விவகாரத்தில் அனைத்து பிரச்சினைகளும் சரியாகவில்லை என்றாலும் கூட, குறிப்பிட்ட அளவு பிரச்சினைகள் சரியாக உள்ளது. இது மிகவும் பொறுமையான வேலை. அதைச் சிறப்பாகச் செய்து வருகிறோம்.

சீனா
ஆனால் ஒரு விஷயத்தில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம்.. அதாவது, தற்போதைய நிலையை மாற்றவோ அல்லது எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை மாற்றவோ சீனாவின் எந்தவொரு ஒருதலைபட்ச முயற்சியையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பேச்சுவார்த்தையில் என்ன பேச வேண்டும், எப்போது பேச வேண்டும் என அனைத்திலும் நாங்கள் தெளிவாக உள்ளோம். சீனாவுடனான பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை.

பாகிஸ்தான்
பாகிஸ்தான் உடன் இப்போது நமக்கு இருக்கும் பல பிரச்சனைகளுக்கு, கடந்த காலங்களில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்த ஆதரவே நேரடியாகக் காரணம்! ஆனால் இப்போது அமெரிக்கா நிலைப்பாடு மாறியுள்ளது. தொலைநோக்கு பார்வையுடன் முடிவுகளை எடுக்கிறது. இதன் காரணமாக உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்கா விமர்சிக்கவில்லை" என்று தெரிவித்தார்.