காங்.-ல் இருந்து கபில் சிபல் திடீர் விலகல்- அகிலேஷ் ஆதரவுடன் ராஜ்யசபா வேட்பாளராக வேட்புமனு தாக்கல்
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் வெளியேறியுள்ளார். மேலும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவுடன் ராஜ்யசபா தேர்தலில் உ.பி. மாநிலத்தில் சுயேட்சை வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார் கபில் சிபல்.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல், அதன் பிந்தைய மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்படாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களும் இந்த தோல்விக்கு முன்வைக்கப்படுகின்றன.
பத்தாண்டுகால வனவாசம்..பாத யாத்திரை.. காங்கிரஸ் குழுவில் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா

காங். அதிருப்தி குழு
காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பில் முழுமையான மாற்றம் தேவை என்பது சீனியர் தலைவர்களின் கருத்து. இது தொடர்பாக காங்கிரஸ் மேலிடத்துக்கு 23 மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கடிதமும் அனுப்பி இருந்தனர். இதனால் காங்கிரஸில் ஜி23 குழு என இத்தலைவர்கள் என அழைக்கப்பட்டனர்.

காங். சீரமைப்பு
அண்மையில் 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. பஞ்சாப்பில் ஆட்சியை ஆம் ஆத்மி கட்சியிடம் பறிகொடுத்தது காங்கிரஸ். இதனையடுத்து காங்கிரஸ் மேலிடம் கட்சி சீரமைப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. மேலும் ஜி23 குழுவின் தலைவர்களுடனும் காங். மேலிடம் ஆலோசனை நடத்தியது.

கபில் சிபல் நிலைப்பாடு
அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை சோனியா காந்தி குடும்பம் விட்டுக் கொடுக்க வேண்டும்; சோனியா குடும்பத்தைச் சேராத ஒருவரே காங்கிரஸ் தலைவராக வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் கபில் சிபல். ஆனால் கபில் சிபலின் இந்த கருத்துக்கு அதிருப்தி தலைவர்களே ஆதரவு தெரிவிக்காத நிலைதான் இருந்தது. அதிருப்தி குழுவுக்கு தலைமை தாங்கியவராக கூறப்பட்ட குலாம் நபி ஆசாத் கூட, சோனியா தலைமை தொடருவதில் எந்த சிக்கலும் இல்லை என்றே கூறினார்.

ராஜ்யசபா வேட்புமனு தாக்கல்
இந்த நிலையில் இன்று திடீரென உ.பி. மாநிலம் லக்னோவில் சட்டசபை வளாகத்தில் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்தார் கபில் சிபல். அவருடன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் உடன் இருந்தார். இதனால் காங்கிரஸில் இருந்து கபில் சிபல் விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல், காங்கிரஸ் கட்சியில் இருந்து மே 16-ந் தேதியே பதவி விலகிவிட்டேன். தற்போது சுயேட்சை வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளேன். அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி எனக்கு ஆதரவு அளிக்கும் என்றார். கபில் சிபலின் இந்த முடிவானது காங்கிரஸுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.