உதய்பூர் படுகொலை.. பாகிஸ்தான் அமைப்புக்கு நேரடி தொடர்பு? சிம் கார்டில் ரகசிய எண்கள்! பரபர தகவல்கள்
டெல்லி: உதய்பூர் டெய்லர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் குறித்து சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர் சர்மா டிவி நிகழ்ச்சி ஒன்றில், இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளைக் கூறி இருந்தார்.
அந்த 4 பேர்.. எடப்பாடி கோட்டையில் இருந்து சீட்டுகளை உருவ திட்டம்.. இறங்கிய 3 புள்ளிகள்- நடக்குமா?
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், பாஜக கட்சி ரீதியாக நுபர் சர்மா மீது நடவடிக்கை எடுத்தது. மேலும், ஒருவரைக் கட்சியில் இருந்தே நீக்கி இருந்தது.

ராஜஸ்தான்
இதனிடையே ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஹாதி போல் பகுதியில் சுப்ரீம் டெய்லர்ஸ் என்ற டெய்லர் கடையை நடத்தி வந்த கன்ஹையா லால் தலை துண்டித்து கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நுபர் சர்மாவுக்கு ஆதரவாக கன்ஹையா லால் சில கருத்துகளைப் பதிவிட்டு இருந்த நிலையில், அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை
துணியைத் தைக்கக் கொடுப்பது போல கடைக்குள் நுழைந்த அவர்கள், திடீரென அவரை தாக்கத் தொடங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இந்த அனைத்தையும் அவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் மிகவும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

கைது
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராஜஸ்தானில் போலீஸ் குவிக்கப்பட்டு, இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்புகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நேற்று நள்ளிரவில் உதய்பூர் நெடுஞ்சாலையில் வைத்து, கொலையாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

பாகிஸ்தான் அமைப்பு
இந்த கொலை சம்பவத்தைப் பயங்கரவாத நிகழ்வாகக் கருதி தேசியப் பாதுகாப்பு முகமை விசாரணைக்குக் களமிறக்கப்பட்டு உள்ளது. இதனிடையே கொலையாளிகளுக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்ட இரு கொலையாளிகளில் ஒருவர் வெல்டிங் கடையில் வேலை பார்த்து வந்தார். மற்றொருவர் உதய்பூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

சிம் கார்டு
இப்போது கைது செய்யப்பட்ட இருவருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான தாவத்-இ-இஸ்லாமி என்ற அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிலும் இரு கொலையாளிகளில் ஒருவருக்கு நேரடியாகவே பாகிஸ்தான் உடன் தொடர்பு இருக்கிறது. அவரது மொபைல்போனில் சுமார் 10 பாகிஸ்தான் எண்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐஎஸ்ஐஎஸ் வீடியோக்கள்
கொலையாளிகளில் ஒருவரான முகமது ரியாஸ் அன்சாரி பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பில் இருந்தவர். கன்ஹையா லாலைக் கொல்வதற்கு முன், அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் தொடர்பான வீடியோக்களையும் பார்த்து உள்ளனர். இந்தத் தகவலை ராஜஸ்தான் அரசு அமைத்துள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

நேபாளம்
ரியாஸ் அன்சாரி, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தவாத்-இ-இஸ்லாம் என்ற அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளார். மற்ற குற்றவாளி நேபாளத்திற்கு இரண்டு முறை சென்று சில பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். அவருக்குத் துபாயிலும் தொடர்பு இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.