கொரோனா வேக்சின்! இந்தியாவில் 42 லட்சம் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.. இனியும் அச்சம் வேண்டாம்
டெல்லி: இந்தியாவில் கொரோனா வேக்சின் பணிகள் காரணமாகப் பல லட்சம் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாகப் பிரபல மருத்துவ இதழான லேன்செட் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் ஓமிக்ரான் கொரோனா ஏற்பட்டது. அதன் பின்னர் கடந்த சில மாதங்களாகவே வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது.
இந்தச் சூழலில் நாட்டில் வைரஸ் பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இது அடுத்த அலையாக இருக்கக் கூடும் என்ற அச்சமும் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
பயம் காட்டும் கொரோனா! பள்ளிகளுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள்? அமைச்சர் அன்பில் மகேஷ் என்ன சொல்கிறார்?

கொரோனா வேக்சின்
இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா வேக்சின் பணிகள் தொடங்கப்பட்டது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே வேக்சின் போடப்பட்டது. அதைத் தொடர்ந்து வேக்சின் பணிகள் மெல்ல விரிவுபடுத்தப்பட்டது. இப்போது நாட்டில் சிறார்களுக்கும் கூட வேக்சின் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. பலரும் ஆர்வத்துடன் வேக்சின் போட்டுக் கொண்டாலும் கூட சிலர், அச்சம் காரணமாக வேக்சின் போடத் தயங்கியே வருகின்றனர்.

3.14 கோடி உயிரிழப்புகள்
இதனிடையே உலகில் உள்ள 185 நாடுகளில் நடத்தப்பட்ட வேக்சின் பணிகள் குறித்த ஆய்வை பிரபல மருத்துவ இதழான லேன்செட் வெளியிட்டுள்ளது. அதில் உலகெங்கும் சுமார் 2 கோடி முதல் 3.14 கோடி வரையிலான கொரோனா உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு கூறியதை போல 2021 இறுதிக்குள் உலகிலுள்ள 40% மக்களுக்கு வேக்சின் போட்டு இருந்தால் மேலும் 5.99 லட்சம் உயிரிழப்புகளைத் தடுத்து இருக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியா
இதில் இந்தியாவில் தடுக்கப்பட்ட கொரோனா உயிரிழப்புகள் குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் சுமார் 42 லட்சம் கொரோனா உயிரிழப்புகள் வேக்சின்களால் தடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நாட்டில் வேக்சின் பணிகள் தான் இத்தனை லட்சம் உயிரிழப்புகளைக் காப்பாற்றி உள்ளது. டெல்டா கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட இந்தியாவிலும் இத்தனை உயிரிழப்புகள் தடுக்கப்பட்டது வேக்சினின் மகத்தான சாதனை என்கிறார் பிரிட்டன் நாட்டை சேர்ந்த பிரபல மருத்துவர் வாட்சன்.

உயிரிழப்புகள்
இதே மதிப்பீட்டை வைத்துப் பார்க்கும் போது, இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 48.2 லட்சம் முதல் 56.3 லட்சம் பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என்றும் வாட்சன் தெரிவித்தார். இது இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகப் பதிவான கொரோனா உயிரிழப்புகளான 5.24 லட்சத்தை விட 10 மடங்கு அதிகமாகும். பல்வேறு தரவுகளைக் கொண்டு இந்த உயிரிழப்புகள் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் வாட்சன் தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பு
கடந்த மாதம் இந்தியாவில் சுமார் 2 கோடி பேர் வரை கொரோனாவால் உயிரிழந்து இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருந்தது. இது உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்திய அரசு சார்பில் உலக சுகாதார அமைப்பின் தரவுகள் தவறானது என்று விளக்கம் கொடுக்கப்பட்டது. அதேநேரம் வேக்சின் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டு வரும் நாட்களில் ஒன்றாக இந்தியா உள்ளது. இதுவரை நாட்டில் 196 கோடி பேருக்கு வேக்சின் போடப்பட்டு உள்ளது.

வேக்சின் பணிகள்
வேக்சின் பணிகள் மட்டும் தொடங்காமல் இருந்து இருந்தால் பல லட்சம் கொரோனா உயிரிழப்புகள் கூடுதலாக ஏற்பட்டு இருக்கும். உலகெங்கும் 3 கோடி கொரோனா உயிரிழப்புகள் வேக்சின் பணிகளால் தடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற லேன்செட் கூறி உள்ள நிலையில், வேக்சின்கள் உலகெங்கும் முறையாக விநியோகம் செய்யப்பட்டு இருந்தால் மேலும் பல லட்சம் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறி உள்ளது.