மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடையில்லை... உச்சநீதிமன்றம் பரபர உத்தரவு
டெல்லி: மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டதற்கு எந்த தடையும் இல்லை என இன்று உச்சநீதிமன்றம் பரபரப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் அகாடி கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார்.
இந்த கூட்டணி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் அமைச்சரான ஏக்நாத் ஷிண்டேவுடன் அணி திரண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கியுள்ளனர்.
மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு உறுதி- சிவசேனா மனு மீது உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தகுதிநீக்க நோட்டீஸ்
இதனால் மகாராஷ்டிராவில் மகா விகாஷ் அகாடி கூட்டணியின் ஆட்சி கவிழும் நிலை உள்ளது. ஏக்நாத் ஷிண்டேவுடன் உள்ள 16 எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸை மகாராஷ்டிரா துணை சபாநாயகர் வழங்கினார். இதற்கு தற்போது இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார்.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை
இதனை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடிஉள்ளது. 16 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தி் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வேளையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கூறி இருப்பது சட்டவிரோதமானது என சிவசேனா கொறாடா சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு எனும் ஆளுநர் உத்தரவை எதிர்க்கும் வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

உச்சநீதிமன்றத்தில் காரசார விவாதம்
இந்த வழக்கு மீது இன்று மாலை விசாரணை துவங்கியது. சிவசேனா மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களும் அனல் பறந்தன. சிவசேனா தரப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வெறும் ஒரே ஒரு நாள்தான் காலஅவகாசம் வழங்குகிறார் அதுவும் எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்த உடன் இந்த அறிவிப்பு வெளியாகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் யார் வாக்களிக்க முடியும். முடியாது என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது என சிவசேனா தரப்பில் வாதமாக வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே சார்பில் வாதம் செய்யப்பட்டது. மேலும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கும், எம்எல்ஏக்களின் தகுதி நீக்க நோட்டீஸ்க்கும் சம்பந்தம் இல்லை என எதிர்தரப்பு வாதம் செய்தது.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அனுமதி
இந்நிலையில் 9 மணிக்கு வழக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் கூறியது. இதையடுத்து 9 மணிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதில், ‛‛நாளை பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவுக்கு தடையில்லை. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு வழக்கின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது'' என கூறப்பட்டது.இதன்மூலம் நாளை மகாராஷ்டிரா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவது உறுதியாகி உள்ளது.