IAS, IPS அதிகாரிகள் விவகாரம்- ஜெ.,மமதா போல இனி முதல்வர்கள் மிரட்ட முடியாது- மத்திய அரசின் புது மசோதா
டெல்லி: ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு மாற்றும் விவகாரங்களில் மாநில அரசுகளின் வீட்டோ எனப்படும் ஒப்புதல் கட்டாயம் எனும் அதிகாரத்தை பறிக்கும் முயற்சிக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஐ.ஏ.எஸ். ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாறுதல்கள் தொடர்பான திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இதனடிப்படையில் மத்திய அரசு பணிகளுக்கு செல்ல விரும்பும் ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை மாநிலங்களிடம் கேட்டுள்ளது மத்திய அரசு.
பிக் பாஸ் தமிழ் 5:கோபமா..எனக்கா..ராஜு மேலேயா.. இது மட்டும்தான் காரணம்.. பாவனியின் புது விளக்கம்
இந்த திருத்த மசோதாவானது ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு மாற்றும் விவகாரங்களில் மாநில அரசுகளின் வீட்டோ அதிகாரத்தை பறிக்க கூடியது எனவும் கூறப்படுகிறது. அதாவது மத்திய அரசு, அதிகாரிகளைக் கேட்டாலும் மாநில அரசு நினைத்தால்தான் அனுப்பி வைக்க முடியும் என்பதுதான் தற்போதைய நிலை.

மமதா எதிர்ப்பு
இத்தகைய மாநில அரசின் உரிமையை அடியோடு பறிக்க போகிறது மத்திய அரசின் புதிய மசோதா. இதன் மூலம் ஒரு அதிகாரியை ஒரு மாநிலத்தில் இருந்து மத்திய அரசுப் பணிக்கு உடனே மாற்றிவிட முடியும். மாநில அரசின் அனுமதி அல்லது ஒப்புதல் இனி தேவைப்படாது என்கிற நிலை உருவாகும். இம்மசோதாவுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கும் மமதா பானர்ஜி கடிதம் அனுப்பியுள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான என்றும் மமதா சாடியிருக்கிறார்.

கருணாநிதி கைது விவகாரம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்கத்தின் தற்போதைய முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விவகாரங்களில் மத்திய அரசுடன் முழு அளவில் மல்லுக்கட்டியவர்கள். 2001-ம் ஆண்டு தமிழக முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பதவியேற்றார். 2001 ஜூன் 29-ந் தேதி நள்ளிரவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மிக மோசமாக தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த கைது நடவடிக்கையின் போது மத்திய அமைச்சர்களாக இருந்த மறைந்த முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோரும் தாக்கப்பட்டனர். அப்போது பிரதமராக மறைந்த வாஜ்பாய் பதவி வகித்தார். ஜெயலலிதாவுக்கு சாதகமாக இருந்த காரணத்தால் பாத்திமாபீவி, ஆளுநர் பதவியில் இருந்து தூக்கியடிக்கப்பட்டார்.

அன்று ஜெ.எதிர்ப்பு
மேலும் முத்துக் கருப்பண், ஜார்ஜ், கிறிஸ்டோபர் நெல்சன் ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு அழைக்கப்பட்டனர். ஆனால் இந்த 3 அதிகாரிகளையும் ஜெயலலிதா விடுவிக்க மறுத்தார். மத்திய அரசு 3 அதிகாரிகளை அழைப்பது மாநில உரிமைகளுக்கு எதிரானது குரல் எழுப்பினார் ஜெயலலிதா. பிற மாநிலங்களின் முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பினார் ஜெயலலிதா. பின்னர் இந்த விவகாரம் ஓய்ந்தது.

மல்லுக்கட்டிய மமதா
இதேபோல் மேற்கு வங்கத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவின் கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த விவகாரத்திலும் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு அனுப்பியாக வேண்டும் என ஓலை அனுப்பியது டெல்லி. ஆனால் மாநிலத்தில் அதிகாரிகள் பற்றாக்குறையாக உள்ளனர். அதனால் மத்திய அரசுப் பணிக்கு அனுப்பி வைக்க முடியாது என கெத்து காட்டினார் மமதா பானர்ஜி. இதனால் மத்திய அரசுக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையே மோதல் வெடித்தது. இனி ஜெயலலிதா, மமதா பானர்ஜி போல மத்திய அரசை இந்த விவகாரத்தில் மிரட்ட முடியாத அளவுக்கு புதிய மசோதாவில் மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.