லடாக் எல்லையில்.. இந்திய-சீன வீரர்கள் மீண்டும் உரசல்?.. வெளியான தகவல்.. இந்திய ராணுவம் மறுப்பு!
டெல்லி: லடாக் எல்லையில் இந்திய-சீன வீரர்கள் இடையே மே முதல் வாரம் சிறு உரசல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை இந்திய ராணுவம் மறுத்துள்ளது.
இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே லடாக் எல்லையில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் பல வீரர்கள் இறந்தனர்.

தொடர்ந்து எல்லையில் இருதரப்பு படையினரும் குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. ராணுவ அதிகாரிகள் அளவில் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கு எல்லையின் பாங்காங் ஏரியின் வடக்கு கரை உள்ளிட்ட பகுதிகளில் இரு தரப்பிலும் நிறுத்தப்பட்டு இருந்த படைகள் குறைக்கப்பட்டன. இரு நாடுகளின் பீரங்கி டாங்கிகளும், போர் வாகனங்களும் அங்கு இருந்து கொண்டு செல்லப்பட்டன.
லடாக் எல்லை நிலவரம்: முதலில் ஒப்புக்கொண்டு.. பின்னர் பின்வாங்க மறுத்த சீனா.. பரபரப்பு தகவல்கள்!
லடாக் எல்லை பதற்றத்தை தணிக்கும் வகையில் இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வானின் ஒய்-சந்திக்கு அருகே இந்தியாசீனா ராணுவ வீரர்கள் இடையே மீண்டும் சிறு உரசல் ஏற்பட்டதாக பத்திரிகைகளில் தகவல் வெளியானது. மே முதல் வாரத்தில் இந்த உரசல் நடந்ததாககவும், ஆனால் எந்தவித மோதலும் இல்லாமல் இரு நாட்டு வீரர்களும் கலந்து சென்றனர் என்று மூத்த அதிகாரிகள் கூறியதாக செய்தி வெளியானது.
ஆனால் இந்த தகவலை இந்திய ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், 'மே முதல் வாரத்தில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா வீரர்கள் இடையே உரசல் நிலவியதாக பத்திரிகை செய்தி வந்துள்ளது. இதுபோன்ற எந்த சம்பவமும் நடக்கவில்லை. இரு தரப்பு ராணுவ பேச்சுவார்த்தையை சீர்குலைப்பதற்காக இதுபோன்ற விஷயங்கள் பரப்பப்படுகின்றன' என்று கூறப்பட்டுள்ளது.