"பிரதமர் மோடிக்கு நடிக்க தெரியாது..!" குஜராத் கலவர வழக்கு தீர்ப்பு.. அமித் ஷா புகழாரம்
டெல்லி: குஜராத் கலவர மேல்முறையீட்டு மனுவில் தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ள நிலையில், இது குறித்து அமித் ஷா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தின் கோத்ராவில் கரசேவகர்கள் இருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 59 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் மத மோதல்கள் நடைபெற்றன. அம்மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்.
TIMELINE: உலகை உலுக்கிய குஜராத் கலவரம்.. ரயில் எரிப்பு முதல் படுகொலைகள் வரை! ஆறாத வடுக்கள்

குஜராத் வன்முறை
இதில் குல்பர்க்கா சொசைட்டி என்ற இடத்தில் நிகழ்ந்த மோதலில் 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ஜாஃப்ரியும் படுகொலை செய்யப்பட்டார். குஜராத் படுகொலைகள் தொடர்பாகச் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இவ்விசாரணைக் குழு 2012-ம் ஆண்டு டிசம்பர் 8-ல் ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்தது.

தள்ளுபடி
அதில், குஜராத் வன்முறைகள் தொடர்பாக அப்போதைய மாநில முதல்வராக இருந்த மோடி உள்ளிட்ட 64 பேரை விடுதலை செய்தது. அவர்கள் மீதான புகார்களுக்கு முகாந்திரம் எதுவும் இல்லை என்றது இந்த விசாரணைக் குழு. இந்த சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு எதிராக அகமதாபாத் கீழ் நீதிமன்றம், குஜராத் உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.

தைரியமான தலைவர்
மேலும், இந்த மேல்முறையீடு வழக்கை நேற்றைய தினம் உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், இது குறித்து உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், "மகத்தான ஒரு தலைவர் 18, 19 ஆண்டுகளாக ஒரு வார்த்தை கூட பேசாமல் போராடி உள்ளார். அவர் தனது அனைத்து வலிகளையும் உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டார். சிவபெருமான் விஷத்தை அருந்தியதை போல 2002 குஜராத் கலவரத்தில் பழிசுமத்தப்பட்ட போது மோடி வேதனை அடைந்தார். அவரது வலியை நான் நெருக்கத்தில் இருந்து பார்த்துள்ளேன். வலுவான ஒருவர் மட்டுமே இவ்வளவு ஆண்டுகள் தைரியமாகப் போராட முடியும்.

டிராமா
இந்த வழக்கு பாஜகவின் நற்பெயரைக் கெடுத்தது, ஆனால் இப்போது அது நீக்கப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராகும் போது மோடி எந்தவொரு டிராமாவும் செய்யவில்லை. யாரிடமும் சென்று போராட்டம் நடத்தச் சொல்லவில்லை. எம்எல்ஏக்கள்-எம்பிக்களை அழைத்து போராட்டம் நடத்தவும் சொல்லவில்லை. சிறப்புக் குழு விசாரணை நடத்த விரும்பும் போது, முதல்வர் பதவியில் இருந்த போதிலும், அவர் ஒத்துழைக்கத் தயாராக இருந்தார்.

போராட்டம் ஏன்
உண்மை நம்முடன் இருக்கும் போது போராட்டம் எதற்கு? கலவரத்தின் போது குஜராத் அரசு தனது நடவடிக்கையில் தாமதிக்கவில்லை. ஆனால் டெல்லியில் எத்தனையோ சீக்கியர்கள் கொல்லப்பட்டனர், ஆனால் அந்த விவகாரத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை? இருப்பினும், இப்போது அவர்கள் தான் நாங்கள் பாரபட்சமாக நடப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்?" என்றார்.

ராகுல் காந்தி
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்துகிறது. ராகுலை விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை மறைமுகமாகச் சாடும் வகையிலேயே அமித் ஷா சாடி உள்ளார்.