டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வீடு தேடி போகுமளவுக்கு ஜெட்லி மோடிக்கு அத்தனை முக்கியமானவரா?

Google Oneindia Tamil News

- ஆர். மணி

டெல்லி: மோடி அரசாங்கத்தின் மூளையாக கருதப்படும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அமையவிருக்கும் புதிய மத்திய அரசில் அமைச்சராக இருக்க மாட்டார் என்பது அநேகமாக உறுதிப்படுத்தப் பட்டுவிட்டது.

புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெட்லி தான் எழுதிய கடிதத்தின் நகலை தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில் ஜெட்லி இவ்வாறு கூறுகிறார்; ''என்னுடைய உடல் நிலை தேறுவதற்கும் என்னுடைய சிகிச்சைக்கும் போதிய கால அவகாசம் தேவைப்படுகிறது. ஆகவே தற்போதைக்கு அமையவிருக்கும் புதிய அரசில் எனக்கு எந்த பொறுப்பையும் தாங்கள் ஒதுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்''.

Modi will surely miss Arun Jaitley

கடந்த 13 மாதங்களாகவே உடல் நலம் குன்றியிருக்கும் ஜெட்லி பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார். முதலில் அவருக்கு உடல் எடையை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை (Beriatric surgery) செய்யப்பட்டது. அதன் பிறகு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அதற்குப் பின்னர் சில மாதங்களுக்கு முன்னர் ஜெட்லியின் இடதுகாலில் ஏற்பட்ட புற்றுநோய் கட்டி அமெரிக்காவில் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் அகற்றப்பட்டது. இதன் பிறகு தற்போது ஜெட்லிக்கு புற்றுநோய்க்கான சிகிச்சையின் தொடர்ச்சியாக கதிரியிக்க சிகிச்சை (Chemotheraphy) கொடுக்கப் பட்டுவருகிறது. இந்த சிகிச்சைக்கு உட்படுபவர்கள் அதிகப்படியான உடல் வலிக்கு ஆளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடியின் உடல் நிலை காரணமாக சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசின் இடைக்கால நிதியறிக்கையை நிதித் துறைக்கு தாற்காலிக பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

யார் இந்த அருண் ஜெட்லி? அதிகாரத்தில் தனக்கு கீழ் பணிபுரிந்தவர்கள் எவரையும் அவர்களது வீடு தேடி போய் பார்க்காத மோடி ஜெட்லியை புதன்கிழமை நேரில் போய் பாரத்து அரை மணி நேரம் அவருடன் பேசுவதற்கு அவசியம் ஏன் வந்தது? அதுவும் ஜெட்லியின் உண்மையான உடல் சுகவீனம் பற்றிய முழு தகவலும் மோடிக்கு மற்றவர்கள் எவரையும் விட நன்றாகவே தெரிந்திருக்கும். அப்படியிருக்கையில் ஜெட்லியை வீடு தேடி போய் ஏன் பார்த்து அரை மணி நேரம் பேசினார் மோடி?

முதலில் அருண் ஜெட்லியின் பின்புலத்தை பார்க்கலாம். 66 வயதாகும் ஜெட்லி, பாஜக வின் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்தியார்த்தி பரீஷத்தின் தலைவராக இருந்திருக்கிறார். டில்லி பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார். 1975 - 77 ம் ஆண்டு காலத்தில் அவசர நிலைக் காலத்தின் போது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அரசால் 19 மாதங்கள் சிறையில் அடைக்கப் பட்டார். 1987 ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி புரியத் தொடங்கினார். 1999 - 2004 ம் ஆண்டு காலத்தில் வாஜ்பாய் அரசில் தகவல் ஒளிபரப்பு, சட்டம், கார்ப்பொரேட் விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்திருக்கிறார். 2004 - 2014 மன்மோஹன் சிங் ஆட்சிக் காலத்தில் மாநில்களவை எதிர்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார்.

Modi will surely miss Arun Jaitley

2014 ம் ஆண்டு மோடி அரசு வந்தவுடன் நிதி, பாதுகாப்பு, கார்ப்போரேட் விவகாரங்கள் ஆகிய இலாக்காக்கள் ஜெட்லிக்கு ஒதுக்கப்பட்டன. பின்னர் பாதுகாப்புத் துறை நிர்மலா சீதாராமனுக்கு ஒதுக்கப் பட்டது. மோடியுடன் நினைத்த நேரத்தில் பேசும் அதிகாரம் இருவருக்கு மட்டுமே இன்றளவும் இந்தியாவில் இருந்து வருகிறது. ஒன்று, பாஜக தலைவர் அமீத் ஷா, இரண்டாவது அருண் ஜெட்லி. 2002 குஜராத் கலவரங்கள் தொடர்பாக பல ஆண்டுகள் மோடி மீது சட்டரீதியாக வந்த அனைத்து வழக்குகளையும் கையாண்டு அவற்று நீர்த்து போகச் செய்து மோடியை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றியதில் ஜெட்லியின் பங்கு அதிகப்படியானது என்றே சொல்லப் படுகிறது.

சுதந்திர இந்தியாவின் வேறெந்த நிதி அமைச்சரும் சந்திக்காத சவால்களை ஜெட்லி சமாளித்தார் என்றே சொல்ல வேண்டும். இதில் முதன்மையானது 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென்ற 'பண மதிப்பிழப்பு' (demonetization) நடவடிக்கை. ரூபாய் நோட்டுக்கள் செல்லாதென்ற அறிவிப்பை மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு அறிவித்தார். ஆனால் இந்த விஷயம் பற்றிய நாடாளுமன்ற விவாதத்தில் எதிர்கட்சிகளின் கடுமையான தாக்குதலுக்கு பதில் சொல்லி மோடி அரசை காப்பாற்றியது அருண் ஜெட்லிதான். மோடி இல்லை.

அதே போல ரிசர்வ் வங்கியுடன் மோடி அரசுக்கு மோதல் வந்தபோது இரண்டு தரப்பின் கண்ணியத்தையும் (ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு) காப்பாற்றியது ஜெட்லிதான். ரிசர்வ் வங்கியின் இரண்டு ஆளுநர்கள், முதலில் ரகுராம் ராஜன், இரண்டாவது உர்ஜித் பட்டேல், இருவரும் கடுமையான மன உளைச்சலுடன் தான் பதவியிலிருந்து விலகிச் சென்றார்கள். ஆனால் அவர்களது கண்ணியத்தை காத்து அவர்களுக்கு கெளரவமான வெளியேற்றம் (honorable exit) கொடுத்தது அருண் ஜெட்லிதான்.

ஜெட்லியின் பலம் அல்லது பலவீனம் அவருக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவு இருக்க வேண்டிய அளவுக்கு இல்லாதது என்பதுதான். பாஜக வின் தாய் ஸ்தாபனம் ஆர்எஸ்எஸ் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் சில நேரங்களில் ஆர்எஸ்எஸ் ஸின் பரிபூரண ஆதரவு இல்லாமல் சிலர் பாஜக அரசுகளில் இருந்திருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் ஜெட்லி. சுப்பிரமணியன் சுவாமி எப்போதும் ஜெட்லியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். தனிமனித தாக்குதல்களும் இதில் அதிகாமாக இருக்கும். ஆனால் ஒரு முறை கூட சுவாமிக்கு ஜெட்லி பதில் சொல்லியதில்லை. பல கட்சிகளிலும் ஜெட்லிக்கு இருக்கும் நண்பர்கள் மோடி அரசுக்கு முக்கியமான சில மசோதாக்கள் நிறைவேற உதவியிருக்கிறார்கள். இதில் முக்கியமானது ஜிஎஸ்டி மசோதா. எதிரும், புதிருமான கட்சிகளை கூட ஒரு மைய புள்ளியில் சில முக்கியமான விஷயங்களில் ஜெட்லியால் ஒருங்கிணைய வைக்க முடிந்திருக்கிறது. ப.சிதம்பரத்துடன் ஜெட்லிக்கு நெருக்கம் அதிகம். பிரச்சனைகள் தீர்ப்பதில் ஜெட்லிக்கு இருக்கும் திறமையை கண்டு அவரை ஆங்கிலத்தில் "trouble shooter" என்றே தேசீய மற்றும் சர்வதேச ஊடகங்கள் எழுதுகின்றன.

புதன்கிழமை ஜெட்லியை சந்தித்த மோடி அமைச்சரவையில் சேருமாறு அழைப்பு விடுத்ததாகவும் ஆனால் அதனை ஜெட்லி நிராகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இலாகா இல்லாத அமைச்சராக சில நாட்கள் இருக்குமாறு மோடி கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் அதனையும் ஜெட்லி ஏற்கவில்லை என்றும் சில அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். அமைச்சரவையில் இல்லாமல் முக்கிய விஷயங்களில் ஜெட்லி யோசனைகளை கூறலாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. ஆனால் இதில் சில சிக்கல்கள் எழ வாய்ப்பிருப்பதாக விவரம் அறிந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சொல்லுகின்றனர்.

''ஒவ்வோர் அமைச்சரும் தான் பதவியேற்கும் போது ரகசிய காப்பு உறுதிமொழியையும் ஏற்றுக் கொள்ளுகிறார். அப்படியிருக்கையில் அமைச்சரவை, அரசு நிர்வாகம் போன்ற விஷயங்களை அமைச்சரவையில் இல்லாத ஒருவருடன் விவாதிப்பது, ஆலோசனைகளை கேட்பது பல புதிய சிக்கல்களை, அரசியல், சட்டம், நிர்வாகம் மற்றும் தார்மீக ரீதியிலான சிக்கல்களை உருவாக்கக் கூடும்'' என்கிறார் ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்.

சில விஷயங்களில் ஒரு வித சுதந்திர மனப்பான்மை, பெருந்தன்மையான குணங் கொண்டவராகவே ஜெட்லி இருந்திருக்கிறார்.

உதராணத்திற்கு ஓரினச் சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் இந்திய தண்டனை சட்டம் 377 ஐ நீக்க போடப்பட்ட வழக்கில் மோடி அரசு சட்டம் 377 க்கு ஆதரவாக வாதிட்டது. ஆனால் ஜெட்லி தன்னுடைய தனிப்பட்ட கருத்து சட்டம் 377 நீக்கப்பட வேண்டும் என்று வெளிப்படையாகவே அறிவித்தார். உச்ச நீதிமன்றமும் சட்டப் பிரிவு 377 ஐ நீக்கியது. ஆர்எஸ்எஸூக்கு ஜெட்லி மீது இருக்கும் வெறுப்பு மற்றும் எதிர்ப்பின் பரிமாணத்தை நாம் இதுபோன்ற உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம்.

இன்னும் ஐந்தாண்டுகள் நாட்டை ஆளப் போகும் பாஜக வுக்கும், மோடிக்கும், அருண் ஜெட்லி போன்ற திறமையான ஒருவர் அமைச்சரவையில் இல்லாதது பெரும் நஷ்டம்தான். அருண் ஜெட்லியின் இடத்தை வேறு ஒருவரை கொண்டு இட்டு நிரப்புவது நரேந்திர மோடிக்கு அவ்வளவு சுலபமான காரியமாக தற்போதைக்கு தோன்றவில்லை.

English summary
PM Narendra Modi will surely miss the absence of finance minister Arun Jaitley.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X