அக்னிபாத்: 60 ரயில்கள் எரிப்பு.. ரூ.700 கோடி சேதம்.. 718 பேர் கைது.. அக்னி குழம்பாக மாறிய போராட்டம்!
டெல்லி: அக்னிபாத் திட்டத்தைக் கண்டித்து இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் ரூ.700 கோடி மதிப்பிலான ரயில்வே சொத்துக்கள் சேதமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ராணுவத்தில் ஓய்வூதிய செலவினங்களை குறைப்பதற்காக, அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ராணுவ வீரர்கள், 4 ஆண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டது. இதில் 25 சதவீதம் பேர், ராணுவத்தில் 15 ஆண்டு கால பணிக்கு வைத்துக் கொள்ளப்பட்டு, மீதம் உள்ளவர்கள் ஒய்வூதியம் இன்றி வெறும் சம்பளத்துடன் வெளியேறும் நிலையில் அக்னிபாத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மாற்றுவழியில் காங்கிரஸ்! அக்னிபாத் திட்டத்தை திரும்பபெற தீர்மானம்! ராஜஸ்தான் அமைச்சரவை அதிரடி

இளைஞர்கள் போராட்டம்
இதனைக் கண்டித்து பீஹார், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, தெலங்கானா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் நேற்று சென்னையிலும் வெடித்தது. வடமாநிலங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில், ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன. ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், ரயில்வே சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன.

பீஹாரில் உச்சம்
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற அக்னிபாத் போராட்டத்தில் 60 ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டதாக ரயில்வே ஊழியர்கள் தரப்பில் தகவல் கூறப்பட்டுளது. அதில் பீஹார் மாநிலத்தில் மட்டும் 11 ரயில் இன்ஜின்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அதேபோல், ரயில்வே நிலையங்களில் இருந்த ஏராளமான கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ரயில்வே துறைக்கு சுமார் ரூ.700 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. பீஹார் மாநிலத்தில் மட்டும் 15 மாவட்டங்களில் நடைபெற்ற இளைஞர்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் விபரம்
அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான இளைஞர்களின் போராட்டத்தின் போது ரயில் பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த நிலையில் ரயில்வே துறை அதிகாரிகள் ரயில் தயாரிப்பான செலவுகளை குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். அதில், சாதாரண ரயில் பெட்டியை தயாரிக்க ரூ.80 லட்சமும், அதேபோல் [பயணிகள் தூங்கும் வசதியுடன் கூடிய ரயில் பெட்டியை தயாரிக்க ரூ.1.25 கோடியும், ஏசி வசதியுடன் கூடிய ரயில் பெட்டியை தயாரிக்க ரூ.3.5 கோடியும் செலவாகும் என்று தெரிய வந்துள்ளது. அதேபோல், ஒரு ரயில் இன்ஜினை தயாரிக்க அரசு தரப்பில் இருந்து ரூ.20 கோடிக்கும் அதிகமான தொகை செலவு செய்யப்படுவதாகவும், 12 பெட்டிகளை கொண்ட ரயிலை உருவாக்க ரூ.40 கோடிக்கும் அதிகமான தொகையும், 24 பெட்டிகளை கொண்ட ரயிலை உருவாக்க ரூ.70 கோடிக்கும் அதிகமான செலவு செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

சேதமான ரயில் விபரம்
இதுதொடர்பாக கிழக்கு ரயில்வேயின் செய்தித் தொடர்பாளர் விரேந்திர குமார் கூறுகையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான இளைஞர்களின் போராட்டத்தின் போது ரயில்வே துறைக்கு சொந்தமான 5 ரயில்கள், 60 ரயில் பெட்டிகள் மற்றும் 11 ரயில் இன்ஜின்கள் தீக்கிரையானது. அதுமட்டுமல்லாமல், 60 கோடிக்கும் அதிகமான பயணிகள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்துள்ளனர். இதனால் ரூ.700 கோடிக்கும் அதிகமாக ரயில்வே துறை இழப்பு ஏற்பட்டுள்ளது.

பீஹாரில் கைது
இதனிடையே அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது 138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 718 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருந்தும், ஆங்காங்கே போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால், மாநிலத்தின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.