"ரொம்ப கஷ்டப்பட்டோம்.." கொரோனா தடுப்பூசி பணியை துவங்கியபோது.. உணர்ச்சி வசப்பட்ட மோடி!
டெல்லி: கொரோனா தடுப்பு ஊசி பணிகளை துவங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் உணர்ச்சிவசப்பட்டவராக காணப்பட்டார். சில விஷயங்கள் பற்றி அவர் பேசும்போது நா தழுதழுத்தது.
இந்தியாவுக்கு இது வரலாற்று சிறப்புமிக்க தருணம். நாடு முழுக்க முதல் கட்ட கொரோனா தடுப்பூசி பணிகளை இன்று பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார்.
இதையொட்டி அவர் தனது துவக்க உரையில் பேசுகையில், நமது மருந்து நிறுவனங்களை பாராட்டினார். உலகிலுள்ள பிற தடுப்பூசிகளை விடவும் இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசி விலை குறைவு என்று அவர் தெரிவித்தார்.
தடுப்பூசிகள் இரண்டுமே பாதுகாப்பானவைதான்.. வதந்திகளை நம்பாதீங்க... மோடி வேண்டுகோள்!

சமூக விலகல் முக்கியம்
மேலும் முதல் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதும் சமூக விலகலை கடைபிடிக்காமல் இருந்து விடாதீர்கள், இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்டு சிறிது நாட்கள் கழித்து தான் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகும், எனவே மக்கள் மெத்தனமாக இருக்க வேண்டாம். முகக் கவசங்கள் அணிவது கட்டாயம் என்று அறிவுறுத்தினார்.

குடும்பத்தினருக்கு பாதிப்பு
இதையெல்லாம் பேசும்போது அவர் வேகமாக பேசியபடி இருந்தார். ஆனால் கீழ்கண்ட விஷயங்களை பேசும்போது அவரது நா தழுதழுத்தது. கண்கள் பனித்து காணப்பட்டது. அவர் கூறியதை பாருங்கள்: உலகம் இதுவரை கண்டிராத மோசமான பாதிப்புகளை கொரோனா ஏற்படுத்தியது. கொரோனா நோய் மக்களை தங்கள் குடும்பத்திலிருந்து ஒதுக்கி வைத்தது.

உடல்களுக்கு மரியாதை செலுத்த முடியவில்லை
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பார்க்க முடியாமல் அழுதனர். மக்கள் ஒருவருக்கு ஒருவர் விலகி இருக்க வேண்டியிருந்தது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட முதியவர்களை குடும்பத்தினர் சந்திக்க முடியவில்லை. கொரோனா காரணமாக இறந்தவர்கள் உடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்த முடியவில்லை.

தழுதழுத்த மோடி
எனவே, இந்த நோய்க்கு எதிராக போராடிய மருத்துவ ஊழியர்கள், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி பணிகள் சமர்ப்பணம். அவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து, பணியாற்றினர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு மோடி பேசியபோதுதான் நா தழுதழுத்தது.