மாஸ்க் அணிவது எப்போது முடியும்? தீபாவளிக்கு கட்டுப்பாடுகளா?பெரும் கேள்விக்கு விடை தந்த விகே பால்
டெல்லி: கொரோனாவை ஒழிக்கும் போரில் தடுப்பூசிகளுடன் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுவதும் முக்கியம் எனத் தெரிவித்துள்ள நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால், பொது இடங்களில் மாஸ்க் அணிவது அடுத்த ஆண்டும் கட்டாயம் தொடரும் எனத் தெரிவித்தார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. முதலில் சில வாரங்களுக்குக் கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தது.
இந்த ஆண்டு இரண்டாம் அலை ஏற்பட்ட சமயத்தில் மத்திய அரசு ஊரடங்கை அறிவிக்கவில்லை என்றாலும்கூட, கிட்டதட்ட அனைத்து மாநில அரசுகளும் கொரோனா தன்மைக்கு ஏற்ப ஊரடங்கை அறிவித்திருந்தனர்.
83 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு... காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம் - கல்வி அமைச்சர்

மாஸ்க்
அதேபோல மத்திய அரசு சார்பில் கொரோனா வழிகாட்டுதல்களும் அறிவிக்கப்பட்டது. பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும், குறைந்தது 6 அடி இடைவெளி பின்பற்ற வேண்டும் என பல்வேறு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் பொது இடங்களில் மாஸ்க் அணியவில்லை என்றால் அபராதமும் வசூலிக்கப்பட்டது. இருப்பினும், மாஸ்க் அணிவதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதாகக் கூறி பலரும் மாஸ்க்குகளை முறையாக அணிவதில்லை.

விகே பால் தகவல்
கொரோனா வேக்சின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் குறைந்தது அடுத்தாண்டு ஆவது மாஸ்க் அணிவதில் தளர்வுகள் எதாவது அறிவிக்கப்படுமோ என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மாஸ்க் அணிவது தொடர்பாக நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் விகே பால் முக்கிய தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "கொரோனாவை தடுக்க தடுப்பூசிகளை நாம் விரைவாகக் கண்டுபிடித்துள்ளோம். அதேபோல கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு அளிக்கும் மருந்துகளையும் நாம் விரைவில் கண்டுபிடிப்போம் என நம்புகிறேன்.

கொரோனா ஒழிக்கும் வழி
அதேநேரம் இந்த கொரோனா இத்துடன் முடிந்துவிட்டது என நம்மால் உறுதியாகக் கூற முடியாது. கொரோனா மூன்றாவது அலை ஏற்படாது என உறுதியாகக் கூற முடியாது. இந்தியாவில் இப்போது பண்டிகை காலம். அடுத்து வரிசையாக பல்வேறு பண்டிகைகள் வருகின்றன. இந்த அபாயகரமான காலத்தில் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரைத் தடுப்பூசி, மருந்துகளுடன் கொரோனா வழிகாட்டுதல்களையும் நாம் முறையாகப் பின்பற்றினால் மட்டுமே வைரசை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.

அடுத்தாண்டும் மாஸ்க் தேவை
இப்போது இருக்கும் சூழலில் நாம் தொடர்ந்து மாஸ்க் அணிய வேண்டும். அடுத்தாண்டு முழுவதும் நாம் மாஸ்க் அணிய வேண்டும். இதில் எந்தவொரு சந்தேகமும் வேண்டாம். அதேபோல கொரோனா பாதிப்பைக் குறைக்கும் மருந்துகளும் நமக்குத் தேவை. கோவாக்சினுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து ஆலோசித்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் கோவாக்சினுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கும் என்றே நம்புகிறோம்.

3ஆம் ஏலை ஏற்படுமா
கொரோனா 3ஆம் அலை எப்போது ஏற்படும் என்ற கேள்வி அனைத்து மக்களிடையே உள்ளது. வேக்சின் பணிகள் முழுமையாக முடிந்து Herd immunity எனப்படும் சமூக தடுப்பாற்றல் ஏற்பட 3 முதல் 4 மாதங்கள் வரை ஆகும். இந்த இடைப்பட்ட காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நம்மால் எதையும் உறுதியாகக் கூற முடியாது. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் மட்டுமே கொரோனா 3ஆம் அலையை நம்மால் தடுக்க முடியும்.

பண்டிகை காலம் எச்சரிக்கை தேவை
வரும் காலங்களில் தீபாவளி போன்ற பண்டிகைகள் அதிகமாக உள்ளன. பண்டிகை காலத்தை நாம் முறையாகக் கையாளவில்லை என்றால், மிக மோசமான வைரஸ் பாதிப்பு ஏற்படும். இதுபோன்ற காலங்களில் அரசு தேவையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதைத் தடுப்பதன் மூலம் கொரோனா பாதிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியும்" என்று அவர் தெரிவித்தார்.