மம்தா & பிரசாந்த் கிஷோர் இடையே மோதலா? வெளியான தகவல்.. திரிணாமுல் கொடுத்துள்ள விளகத்தைப் பாருங்கள்
டெல்லி: திரிணாமுல் தலைவர் மம்தா மற்றும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச்/ஏப்ரல் மாதங்களில் தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதில் மே. வங்கத்தில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பாஜக இறங்கி வேலை செய்தது.
பிரதமர் மோடியே பல முறை மே.வங்கம் சென்று பிரசாரம் செய்தார். அதேபோல ராஜ்நாத் சிங் தொடங்கிப் பல மூத்த அமைச்சர்களும் கூட மேற்கு வங்கத்தில் தீவிர பரப்புரை செய்தனர்.
அதிகரிக்கும் ஓமிக்ரான்: எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டிய நேரம்.. பிரதமர் மோடி பேச்சு

மம்தா பானர்ஜி
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் மம்தா பானர்ஜி தான் மேற்கு வங்கத்தில் முதல்வராக உள்ளார். இதனால் அதிருப்தி அலை ஏற்பட்டிருக்கும் என்பதாலும் அங்கு வேறு எந்தவொரு எதிர்க்கட்சியும் இல்லை என்பதாலும் எளிதாக வெல்லலாம் எனத் திட்டம் போட்டுக் களமிறங்கியது பாஜக. இருப்பினும், அதில் எதிர்பார்த்த முடிவுகள் பாஜகவுக்கு கிடைக்கவில்லை. இந்தத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மாபெரும் வெற்றியைப் பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்தது. அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி முதல்வராகத் தொடர்ந்தார்.

பிரசாந்த் கிஷோர்
இந்தத் தேர்தலில் மம்தாவுக்கு பக்க பலமாக இருந்து தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர். வாக்குப்பதிவு முன்பு இருந்தே கூட, பாஜகவால் 100 இடங்களைத் தாண்ட முடியாது என்றும் திரிணாமுல் காங்கிரஸ் மாபெரும் வெற்றியை பெரும் என்றே அவர் தொடர்ந்து கூறி வந்தார். அவர் கூறியதை போலத் தான் தேர்தல் முடிவுகள் அமைந்தது. மேற்கு வங்க தேர்தலுக்கு பிறகும் கூட, பிரசாந்த் கிஷோரும் திரிணாமுல் தலைவர் மம்தாவும் பல்வேறு கட்டங்களிலும் இணைந்தே செயல்பட்டு வந்தனர்.

திரிணாமுல் விளக்கம்
இந்தச் சூழ்நிலையில் மம்தா பானர்ஜிக்கும் பிரசாந்த் கிஷோரும் மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானது. இருப்பினும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இதை முற்றிலுமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் ட்விட்டர் பக்கத்தில், "திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஐபேக் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் எந்தவொரு ஆதாரமும் இல்லை. மம்தா பானர்ஜி தலைமையின் கீழ், நாங்கள் ஒரு அணியாகச் செயல்படுகிறோம், எதிர்காலத்திலும் தொடர்ந்து ஒத்துழைப்போம் " என்று அதில் கூறப்பட்டுள்ளது.

என்ன காரணம்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் ஐபேக் நிறுவனமும் வேறு வேறானவை என்றும் அந்த நிறுவனத்தின் கருத்துகள் திரிணாமுல் கட்சியின் கருத்துக்களாக எடுத்துக் கொள்ள கூடாது என திரிணாமுல் எம்பி டெரிக் ஓ பிரையன் கூறிய பிறகு, இரு தரப்புக்கும் இடையே மோதல் உள்ளதாகத் தகவல் வெளியானது. இந்தச் சூழலில் தான் திரிணாமுல் காங்கிரஸ் திட்டவட்டமாக அதை மறுத்துள்ளது. டெரிக் ஓ பிரையன் கூறுகையில், "ஐபேக் நிறுவனத்தை ஐந்தாண்டுகளுக்கு பணியமர்த்திய முதல் அரசியல் கட்சி திரிணாமுல் தான். அவர்களுக்கு சில இலக்குகள் உள்ளன. எங்கள் முக்கிய நோக்கம் பாஜகவைத் தோற்கடித்து, எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருக்கும் இடங்களில் நுழைவதே. எனவே, திமுக முன்னணி சக்தியாக இருக்கும் தமிழகத்திலோ அல்லது சிவசேனா, என்சிபி கட்சிகள் இருக்கும் மகாராஷ்டிராவிலோ திரிணாமுல் காங்கிரஸ் நுழையாது" என்று கூறினார்.