வடகிழக்குப் பருவமழை டிசம்பரில் மீண்டும் அதிரடி ஆட்டம் - 132% அதிகம் பொழியுமாம்
டெல்லி: வடகிழக்குப் பருவமழை கடந்த 1901ஆம் ஆண்டுக்குப் பிறகு நவம்பரில் அதிகமாக கொட்டித்தீர்த்த நிலையில் டிசம்பர் மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 132 சதவிகிதத்திற்கு மேல் மழை பெய்ய கூடிய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்தியாவில் ஜூன் மாதம் தென்மேற்குப்பருவமழை தொடங்கி செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும். அதே போல அக்டோபரில் தொடங்கும் வடகிழக்குப்பருவமழை டிசம்பர் இறுதி வரை பொழியும். இந்த மழை பொழிவு இயல்பான அளவாக இருந்தால்தான் விவசாயம் செழிக்கும். கடந்த சில ஆண்டுகாலமாகவே பருவமழைகள் இயல்பான அளவும் அதை விட அதிகமாகவே பல பகுதிகளில் பெய்து வருகிறது.
3 வேளாண் சட்டங்கள் ரத்து.. மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர்
நடப்பாண்டு தென்மேற்குப் பருவமழை காலத்தில் வட இந்தியாவில் பெருமழை கொட்டித்தீர்த்தது ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தென் இந்தியாவிலும் ஓராளவுக்கு நீர் நிலைகள் நிரம்பின. தொடர்ந்து அக்டோபரில் ஆரம்பித்த மழை நவம்பர் மாதத்தில் அபரிமிதமாக கொட்டித்தீர்த்தது. 1901 ஆம் ஆண்டுக்குப்பிறகு நவம்பர் மாதத்தின் மிக அதிக மழை பதிவாக இது கருதப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கொட்டித்தீர்த்த கனமழை
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த நவம்பரில் மிக கனமழை பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த நவம்பர் மாதத்தில் 11 அதிதீவிர கனமழை பொழிவுகளும் 168 மிக கன மழை பொழிவுகளும் 645 கன மழை பொழிவுகளும் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதிகனமழையால் பாதிப்பு
அதி கனமழை காரணமாக தென்னிந்தியா மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. தென்னிந்தியாவில், நவம்பரில் 160 சதவிகிதம் கூடுதலாக மழை பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பரில் 20 சென்டிமீட்டருக்கு அதிகமாக 11 மிக அதி கனமழைப்பொழிவுகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதி கனமழை பொழிவு
1901 ஆம் ஆண்டுக்குப்பிறகு நவம்பர் மாதத்தின் மிக அதிக மழை பதிவாக இது கருதப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நவம்பரில் இயல்பான மழை அளவான 8.95 சென்டிமீட்டரை விட 160 சதவிகிதம் அதிகமாக 23.27 சென்டிமீட்டர் மழை இந்த ஆண்டு பதிவாகி உள்ளது. தென்னிந்தியாவில் டிசம்பர் மாத மழைப்பொழிவு இயல்பைவிட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கூடுதல் மழை
டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையில் ஆந்திர பிரதேச கடலோர பகுதிகள், தெற்கு கர்நாடகா, தமிழ்நாடு, புதுவை மற்றும் கேரளா ஆகிய இடங்களில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு இருக்கும் என்று தெரிவித்துள்ளது. ஆந்திரா, ராயலசீமா, தமிழகம், புதுச்சேரி, தெற்கு உள் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட இடங்களில் இயல்பை விட அதிக மழை பதிவாகும் என்று கூறப்பட்டுள்ளது.

பெரு மழையை சமாளிக்க முடியுமா
டிசம்பர் மாதத்தில் இயல்பை விட அதிகமாக 132 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. அதே நேரத்தில் வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் மழை இயல்பை விட குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொட்டித்தீர்த்த மழையால் அணைகள் நிரம்பி ஆறுகளில் எல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்னும் பல பெருமழைகளை எப்படி சமாளிப்பார்கள் என்ற கவலை எழுந்துள்ளது.