நுபுர் சர்மா பற்றி உச்சநீதிமன்ற கருத்து: தலைமை நீதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் உட்பட 117 பேர் கடிதம்
டெல்லி: ‛‛நுபுர் சர்மாவின் மனு மீதான விசாரணையின்போது நீதிபதிகளின் அணுகுமுறை எந்த பாராட்டையும் பெறத்தகுதியற்றது. அதோடு உச்சநீதிமன்றத்தின் நேர்மை மற்றும் மரியாதையை பாதிக்கும் வகையில் உள்ளது'' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணாவுக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ்கள் என மொத்தம் 117 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.
இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் பற்றி டிவி விவாதத்தில் பாஜகவின் நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் போராட்டங்கள் நடந்தன.
மேலும் முஸ்லிம் நாடுகளில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
குஜராத்தியில் மோடிக்கு ட்வீட்.. உருது மொழியில் பதிலடி தந்த பாஜக.. உக்கிரமாகும் சண்டை - பின்னணி என்ன?

நுபுர்சர்மாவை சாடிய உச்சநீதிமன்றம்
இதற்கிடையே நுபுர்சர்மாவின் சர்ச்சை பேச்சு தொடர்பாக அவர் மீது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்றம் செய்யக்கோரி நுபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த ஒன்றாம் தேதி உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது, உச்சநீதிமன்றம் நுபுர் சர்மாவை கடுமையாக கண்டித்தது. நுபுர்சர்மாவின் செயல்பாடு குறித்து நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், ‛‛நுபுர் சர்மாவின் பொறப்பற்ற பேச்சால் இந்த நாடு பற்றி எரிகிறது. ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்த டெய்லர் கொலைக்கும் நுபுர்சர்மா தான் காரணம். நுபுர் சர்மா தனது கருத்துகளை காலம் தாழ்த்தி வாபஸ் பெற்றுள்ளார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் கூறுகிறார். அவரால் தான் இந்த நாட்டுக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது'' என கடுமையாக விமர்சித்தனர்.

தலைமை நீதிபதிக்கு கடிதம்
இந்நிலையில் தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. 15 முன்னாள் நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட ஓய்வு பெற்ற 77 அதிகாரிகள், ஓய்வு பெற்ற 25 பாதுகாப்பு படை அதிகாரிகள் கையெழுத்திட்டு அந்த கடிதத்தை அவருக்கு அனுப்பி உள்ளனர். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

உத்தரவில் இடம்பெறாத கருத்துகள்
நுபுர் சர்மா மனுவை இருநீதிபதிகள் சரூ்யா காந்த், பர்திவாலா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்தது. இவர்கள் நீதிமன்றத்தில் லட்சுமண் ரேகையை மீறி கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் அவர்கள் தெரிவித்த கருத்து என்பது ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு ஒரே நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இருப்பினும் இந்த கருத்துகள் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் இடம்பெறவில்லை. இது நீதித்துறை நெறிமுறையின் ஒருபகுதியாக இல்லாததால் புனிதமாக கருத முடியாது. இத்தகைய மூர்க்கத்தனமான அத்துமீறல்கள் நீதித்துறை வரலாற்றில் இல்லை.

அனைத்தும் மீறப்பட்டுள்ளது
மேலும் நீதிபதிகளின் கூற்றுகள் என்பது மனுதாரரின் மனு தொடர்பான கருத்துகளாக இல்லை. இது முன்னெப்போதும் இல்லாத வகையில் அனைத்து நியதிகளையும் மீறப்பட்டுள்ளது. மேலும் உதய்ப்பூர் கொலை வழக்கு தொடர்பான கருத்து என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் உள்ளது. மேலும் மனுதாரரின் அடிப்படை உரிமையை பாதுகாப்பதற்கு பதில் மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்ள மறுத்து மனுவை திரும்ப பெற கட்டாயப்படுத்தி உள்ளது.

பாராட்டு பெற தகுதியற்றது
மேலும் ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு வழக்கை மாற்றும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கு இல்லை என்பதை அறிந்தும் உயர்நீதிமன்றத்தை அணுகும்படி கட்டாயப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கின் வித்தியாசத்தை புரிந்து கொள்ள தவறப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இத்தகைய அணுகுமுறை எந்த பாராட்டையும் பெறத் தகுதியற்றது மற்றும் உச்சநீதிமன்றத்தின் நேர்மை மற்றும் மரியாதையை பாதிக்கும் வகையில் உள்ளது'' என கூறியுள்ளனர்.

இன்னொரு கடிதம்
இதேபோல் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி அமைப்பு சார்பிலும் நீதிபதிகளின் கருத்தை திரும்ப பெற வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்ற நீதிபதி என்வி ரமணாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நுபுர் சர்மா வழக்கில் நீதிமன்றத்தின் கருத்தை வாபஸ் பெற வேண்டும் எனக்கூறி அஜய் கவுதம் என்பவரும் உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.