"மாட்டிக்கிச்சே".. வாயை கொடுத்து சிக்கிய நுபுர் ஷர்மா.. பறந்தது நோட்டீஸ்.. டெல்லி போலீஸ் அதிரடி
டெல்லி: பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மாவுக்கு, உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஏற்கனவே கடந்த மாதம் 18ம் தேதி நுபுர் ஷர்மாவிடம் விசாரணை நடத்தி டெல்லி போலீசார் வாக்குமூலம் பெற்றிருந்த நிலையில், மீண்டும் அவருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த மாதம் நுபுர் ஷர்மா, டிவி விவாத நிகழ்ச்சியில், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.. இது இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலுமுள்ள இஸ்லாமியர்களிடமிருந்தும் பெரும் கண்டனத்துக்குள்ளானது.
இந்த விவகாரத்தில் நுபுர் ஷர்மாவைக் கைது செய்யக்கோரி டெல்லி, உத்தரப்பிரதேசம் என பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களும் வெடித்தன.
நுபுர் ஷர்மா குறித்து உச்சநீதிமன்றத்தின் கருத்து.. பாஜகவை வெட்கி தலைகுனிய வைத்துள்ளது.. காங்கிரஸ்!

டெய்லர் வீடியோ
இந்த நிலையில்தான், கடந்த செவ்வாயன்று, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் டெய்லர் ஒருவர் வீடியோ வெளியிட்டதாக, அந்த நபரை இரண்டு பேர் தலை துண்டித்துக் கொலைசெய்யப்பட்டிருப்பது தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம்கோரட், நுபுர் ஷர்மாவுக்கு நேற்றைய தினம் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தது..

பேச்சுரிமை
"ஜனநாயகம் அனைவருக்குமே பேச்சுரிமை வழங்கியுள்ளது. ஆனால், அதற்காகவெல்லாம் ஜனநாயகத்தின் வரம்பை மீற அனுமதிக்க முடியாது. மதம் சார்ந்த விஷயங்களில் மிகவும் கவனமாகச் செயல்படவேண்டிய ஒரு நிலையில், ஒரு தேசிய ஊடகத்தில் பேசக்கூடிய நபர் இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டதும், அதன்மூலம் ஏற்பட்ட விளைவும், ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது. ஒரு கட்சியின் செய்தித்தொடர்பாளராக இருப்பதால் எதையும் பேசிவிட முடியாது" என்று கண்டிப்பு காட்டியது.

சுப்ரீம்கோர்ட்
அத்துடன், ஒட்டுமொத்த நாட்டு மக்களிடம் நுபுர் ஷர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரவிட்ட சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள், நுபுர் ஷர்மா மீது பல்வேறு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் டெல்லி போலீசின் நடவடிக்கை என்ன? என்றும் நீதிபதிகள் கேள்வியெழுப்பியிருந்தனர்.. அதாவது, நுபுர் சர்மா மீது இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? நுபுர் சர்மாவை ஏன் டெல்லி போலீசார் கைது செய்யவில்லை? விசாரணைக்குப் போன நுபுர் சர்மாவுக்கு சிவப்பு கம்பள மரியாதை கிடைத்ததா? அதிகாரம் தங்களிடம் இருக்கிறது என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பது எப்படி சரியாகும்? என்றெல்லாம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

நுபுர் ஷர்மா
சுப்ரீம்கோர்ட் தலையில் குட்டியபிறகுதான், டெல்லி போலீஸ் உடனடியாக விழித்து கொண்டுள்ளது.. அதன்படி, விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஏற்கனவே கடந்த மாதம் 18ம் தேதி நுபுர் ஷர்மாவிடம் விசாரணை நடத்தியிருந்த நிலையில், மீண்டும் அவருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.. இது தொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனர் கேபிஎஸ் மல்ஹோத்ரா சொல்லும்போது, கடந்த ஜூன் 18- ந் தேதியன்று நுபுர் ஷர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது... சட்டத்தின் படி அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது" என்றார்.