சூது கவ்வி.. தர்மம் வென்றதோ? முகம் முழுக்க சிரிப்போடு வந்த ஓபிஎஸ்! டெல்லி ஹோட்டலில் நடந்தது என்ன?
டெல்லி: டெல்லி சென்றுள்ள ஓ பன்னீர்செல்வம் தரப்பு இன்று மிகவும் குஷியாக இருந்ததாக டெல்லி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனது டீமோடு மீண்டும் சென்னை திரும்பும் அவர்.. கொஞ்சம் உற்சாக மிகுதியில் இருக்கிறாராம்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நேற்று முதல்நாள் மாலை டெல்லி சென்றார். அதிமுக பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் அவமதிக்கப்பட்ட நிலையில் மிகுந்த சோகத்தோடு அவர் வீட்டிற்கு திரும்பினார்.
இந்த நிலையில் அன்று மாலையே டெல்லி கிளம்பியவர் டெல்லியில் பல சந்திப்புகளை மேற்கொண்டார். சில மூத்த பாஜக தலைவர்களையும் அவர் சந்தித்தார்.
அதிமுக விவகாரம்.. முதலாளியை சந்திக்க சென்றுள்ளார் ஓபிஎஸ்.. கார்த்தி சிதம்பரம் பரபரப்பு..!

மோடி சந்திக்கவில்லை
பிரதமர் மோடியை இந்த பயணத்தில் ஓபிஎஸ் சந்தித்தாலும், தனியாக இவர்கள் மீட்டிங் நடக்கவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு பாஜக கூட்டணி வேட்பாளராக மனு தாக்கல் செய்த நிகழ்வில் மட்டும் ஓபிஎஸ் - மோடி சந்தித்தனர். இவர்கள் தனியாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பிரதமர் மோடி ஓபிஎஸ்ஸை சந்திக்க மறுத்துவிட்டார். பல்வேறு பணிச்சுமை காரணமாக இந்த சந்திப்பு நடக்கவில்லை.

வேறு சிலரை சந்தித்தார்
ஆனாலும் மனம் தளராத விக்ரமாதித்தன் போல வேறு சில பாஜக தலைகளை இவர் சந்தித்து இருக்கிறார். தமிழ்நாடு அரசியலில் ஆர்வம் காட்டும் டெல்லி பாஜக புள்ளி ஒருவரை இவர் சந்தித்து பேசி இருக்கிறார். மோடி பார்க்கவில்லை என்றாலும்.. மோடி சார்பாக இவருடன் ஓபிஎஸ் சந்திப்பு நடத்தி இருக்கிறாராம். அதில்.. 2017ல் அதிமுகவில் இரண்டு அணி பிரிந்த பின் மீண்டும் பாஜக சொல்லித்தான் அதிமுகவில் எல்லோரும் ஒன்றாக மாறினோம்.

கடுமையாக முயன்றார்
பாஜக கேட்டதால்தான் துணை முதல்வர் பதவியை பெற்றேன், முதல்வர் வேட்பாளர் வாய்ப்பை விட்டுக்கொடுத்தேன். ஆனால் இப்போது என் அரசியலே முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. நான் அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்தால்தான் பாஜகவால் அதிமுக கூட்டணியில் இருக்க முடியும். எடப்பாடி கூட்டணியை விரும்பவில்லை. பாஜகவை அவர் கழற்றிவிடுவார்.. ராகுலிடம் எடப்பாடி போனில் பேசியதை மறக்க வேண்டாம்... என்று பாஜக டெல்லி நிர்வாகிகளிடம் ஓபிஎஸ் எடப்பாடி பற்றி புகார் பட்டியல் வாசித்து பேசி இருக்கிறாராம்.

ஹோட்டல் மீட்டிங்
அதோடு பாஜகவிற்கு சில வாக்குறுதிகளை ஓபிஎஸ் கொடுத்து உள்ளாராம். டெல்லி தரப்பில் விசாரித்ததில்.. ஓபிஎஸ் ஒருவரை அல்ல மொத்தம் 3 பாஜக தலைகளை சந்தித்து உள்ளார். பாஜக அல்லாமல் பாஜகவோடு நெருக்கமாக இருக்கும் இன்னொரு சென்னை புள்ளியிடம் போனில் பேசி இருக்கிறார். இதில் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றனவாம். அதாவது மொத்தமாக அதிமுகவை கைப்பற்றும் அளவிற்கு எல்லாம் இல்லை.

சந்தோசமாக இருக்கிறார்
மாறாக, கட்சியில் மீண்டும் தனது குரலுக்கு மதிப்பு வரும் வகையில் ஓபிஎஸ்ஸுக்கு சில ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதனால் முதலில் மோடியை பார்க்க முடியவில்லை என்று வருத்தத்தில் இருந்த ஓபிஎஸ் இப்போது நிம்மதியோடு இருக்கிறாராம். ஸ்டார் ஹோட்டலில் நடந்த அந்த சந்திப்பிற்கு பின் ஓபிஎஸ் மிகுந்த சந்தோசத்தோடு.. முகம் முழுக்க சிரிப்போடு வெளியில் வந்து உள்ளார். அவர் உற்சாகமாக காணப்படுவதாக கூறப்படுகிறது.

இன்று திரும்புகிறார்
இந்த உற்சாகத்தோடு அவர் சென்னை திரும்புகிறார். அவருடன் டெல்லி சென்ற ஓ பி ரவீந்திரநாத், மற்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆகியோரும் சென்னை திரும்புகிறார்கள். பின்னர் சென்னையில் இவர்கள் தீவிர ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். பாஜக வழிகாட்டுதல்களின்படி இவர்கள் ஆலோசனை மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இது அதிமுகவில் திருப்பத்தை ஏற்படுத்துமா.. ஓபிஎஸ் சொல்வது போல சூது கவ்வி தர்மம் வெல்லுமா? என்பது போக போகத்தான் தெரியும்!