இ-பைக் தீ பிடிக்கத்தான் செய்யும்! வாயை கொடுத்து வாங்கிக் கட்டிய ஓலா சிஇஓ! வச்சு செய்த நெட்டிசன்ஸ்கள்
டெல்லி : எலெக்ட்ரிக் வாகனங்கள் என்றால் தீப்பிடித்து எரியத் தான் செய்யும் என்ற ரீதியில் கோலா நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது
உலகம் முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு மாற்றான எரிசக்தியை தேடும் பயணம் தீவிரமடைந்து வருகிறது. கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றம் போன்ற காரணங்களால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.
எனவே தான் டாடா, மஹிந்திரா, ஓலா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களும் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரித்து வருகின்றன.

எலக்ட்ரிக் வாகனங்கள்
அதே நேரத்தில் மின்சார வாகனங்களே அடுத்த தலைமுறை வாகனங்கள் என்ற சூழல் உருவாகியுள்ள நிலையில், அவற்றின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது. காரணம் தமிழகம், இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளில் எலக்ட்ரிக் வாகனங்கள் குறிப்பாக இருசக்கர வாகனங்கள் தீப்பிடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

தீ விபத்துகள்
தமிழகத்திலும் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்துள்ளன. மதுரை சின்ன சொக்கிக்குளத்தில் கடந்தண்டு டிசம்பர் மாதம் முருகானந்தம் என்பவரது வீட்டில் மின்சார இருசக்கர வாகனம் தீப்பிடித்தது. பல மணி நேரம் சார்ஜ் போட்டதால் இருசக்கர வாகனம் வெடித்து அருகிலிருந்த காரும் தீப்பற்றியது. மதுரை வில்லாபுரத்தில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார வாகனம் தீப்பற்றி, அருகிலிருந்த மற்ற வாகனங்களும் பற்றி எரிந்தது. சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

ஓலா சிஇஓ பவிஷ் அகர்வால்
இந்நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் என்றால் தீப்பிடித்து எரியத் தான் செய்யும் என்ற ரீதியில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மகாராஷ்டிராவின் மும்பை புறநகர் பகுதியில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இதனால் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஒருவித அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது இந்நிலையில் டாடா நெக்ஸான் வாகனம் தீப்பிடித்தது குறித்து வீடியோ ஒன்றை கமல் ஜோஷி என்பவர் டுவிட்டரில் பகிர்ந்திருந்தார்.

தீ விபத்துகள் ஏற்படும்
இந்தப் பதிவை ரீட்வீட் செய்துள்ள ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் எலக்ட்ரிக் வாகனங்களை தீப்பிடிப்பது என்பது தவிர்க்க முடியாத நிகழ்வு என்பது போல பதிவிட்டுள்ளார் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், " எலக்ட்ரிக் வாகனங்களில் தீ விபத்துகள் ஏற்படும். அனைத்து உலகளாவிய தயாரிப்புகளிலும் நிகழ்கிறது. எலக்ட்ரிக் வாகனங்களில் தீயானது ICE தீயை விட மிகவும் குறைவாகவே உள்ளது." என பதிவிட்டுள்ளார். அவரது பதிவு பொருப்பற்றது என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.