ஒமிக்ரான் ‛சைலன்ட் கில்லர்’... உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா விளக்கம்
டெல்லி: ஒமிக்ரான் கொரோனா வைரஸ் ‛சைலன்ட் கில்லர்' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறினார்.
சீனாவில் 2019ல் துவங்கிய கொரோனா பாதிப்பு உலக நாடுகளை முடக்கி போட்டது. தொடர்ந்து உருமாறி கொடூர தாக்குதல் நடத்தியது. இந்தியாவில் இதுவரை 3 அலைகளாக கொரோனா வைரஸ் மனிதர்களை தாக்கியுள்ளது.
தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. கோர்ட்டுகளில் நேரடி விசாரணையை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் ‛சைலன்ட் கில்லர்' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா கூறினார்.

வைரஸ் காய்ச்சலாக..
இன்றைய விசாரணையின்போது மூத்த வழக்கழிஞரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவருமான விகாஷ் சிங், தலைமை நீதிபதி என்வி ரமணாவிடம் ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது, ‛‛ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு வைரஸ் காய்ச்சல் போன்றதாக தான் உள்ளது. மக்கள் எளிதில் மீண்டு வருகிறார்கள். விரைவில் நீதிமன்ற வழக்குகளை முழுஅமர்வு நேரடியாக விசாரிக்க வேண்டும்'' என்றார்.

சைலன்ட் கில்லர்
இதற்கு தலைமை நீதிபதி ரமணா பதிலளித்தார். அவர் கூறுகையில், ‛‛நான் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டேன். நான்கு நாளில் அதில் இருந்து மீண்டுவிட்டேன். ஆனால் தற்போதும் வைரஸ் பாதிப்பின் தாக்கத்தை உணர்கிறேன். ஒமிக்ரான் என்பது சைலன்ட் கில்லர். கொரோனா முதல் அலையில் நான் பாதிக்கப்பட்டபோது விரைவாக குணமடைந்தேன். 3வது அலை பாதிப்பில் 25 நாட்கள் ஆகியும் வைரஸின் தாக்கம் உள்ளது. இன்றும் பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டி உள்ளது'' என்றார்.

துரதிர்ஷ்டவசமாக...
இதற்கு வழக்கறிஞர், ‛‛துரதிர்ஷ்டவசமாக உங்களுக்கு வைரஸின் தாக்கம் தொடர்கிறது. ஆனால் மக்கள் குணமடைந்து வருகிறார்கள்'' என்றார். இதை கேட்ட தலைமை நீதிபதி, நிலைமை பார்த்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

278 பேர் பலி
இந்தியாவில் இன்று காலை 8 மணியுடன் முடிவுக்கு வந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் மொத்தம் 15,102 பேர் பாதிக்கப்பட்டனர். கொரோனா உறுதி செய்யும் சதவீதம் 1.28 சதவீதமாக உள்ளது. 278 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்து 12 ஆயிரத்து 622 ஆக அதிகரித்துள்ளது.