காஷ்மீரில் தொடரும் கொலைகள்- மீண்டும் பண்டிட்டுகள் வெளியேற்றம்? டெல்லியில் இன்று கெஜ்ரிவால் போராட்டம்
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பண்டிட்டுகள் இலக்கு வைத்து படுகொலை செய்யப்படுவது தொடர் நிகழ்வாகி வருகிறது. பண்டிட்டுகள் படுகொலையைக் கண்டித்து டெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சி போராட்டம் நடத்துகிறது.
ஜம்மு காஷ்மீரில் 1980, 1990களில் இருந்து இந்து பண்டிட்டுகள், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற காஷ்மீர் பயங்கரவாதிகளாள் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் பண்டிட்டுகள், இந்திய நிலத்தில் அகதிகளாக்கப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் பண்டிட்டுகளை மீளக் குடியேற்றம் செய்வதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவு நீக்கத்துக்கு பின்னர் இந்த நடவடிக்கைகள் தீவிரமாகின.
ஆனால் காஷ்மீர் பயங்கரவாதிகள் மீண்டும் பண்டிட்டுகளுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். கடந்த 3 மாதங்களில் 13 பண்டிட்டுகள் படுகொலை செய்யபப்ட்டுள்ளனர். இதனால் ஜம்மு காஷ்மீரில் இருந்து பண்டிட்டுகள் மீண்டும் வெளியேறும் நிலை ஏற்பட்டது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, ஜம்மு காஷ்மீரில் இருந்து பண்டிட்டுகளை ஒட்டுமொத்தமாக மீண்டும் வெளியேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று ஆம் ஆத்மி கட்சியினர் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்கின்றனர். காஷ்மீர்- காஷ்மீர் பண்டிட்டுகளுக்கானது என்ற முழக்கத்தை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்க உள்ளார்.