12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் - நாடாளுமன்ற கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்?
டெல்லி: ராஜ்யசபாவில் 12 எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் முழுவதையும் எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
Cyclone Jawad: டிசம்பர் 3 ல் அந்தமான் கடலில் ஜாவத் புயல்?.. யார் பெயர் வைத்தது தெரியுமா?
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளில் ராஜ்யசபாவில் கடும் அமளி ஏற்பட்டது. அப்போது அமளியில் ஈடுபட்டதாக தற்போதைய குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று காங்கிரஸ், சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பிக்கள் கூட்டத் தொடர் முழுவதற்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் யார் யார்?
காங்கிரஸ் கட்சியின் அகிலேஷ் பிரசாத் சிங், ராஜாமணி படேல், சாயா வர்மா, பீபுண் போரா, சயீத் நாஸிர், ஹுசைன், புலோ தேவி நெதம்; சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி, அனில் தேசாய், திரிணாமுல் காங்கிரஸின் டோலா சென், சாந்தா சேத்ரி, இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த இளமாறம் கரீம், பினாய் விஸ்வம் ஆகியோர் ராஜ்யசபாவிலலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களாவர். 12 எம்.பிக்கள் செய்யப்பட்ட உடனேயே காங்கிரஸ், திமுக, மதிமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் கூட்டாக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டன.

முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில், 12 எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. மக்கள் மன்றத்தில் இத்தகைய செயல்கள் ஜனநாயக உணர்வைக் குறைக்கின்றன. இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டிருந்தார்.

பிளவுபட்ட எதிர்க்கட்சிகள்
மேலும் எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உடனேயே டெல்லியில் ராஜ்யசபா காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்கவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள், தங்களது எம்.பிக்கள் ரத்து தொடர்பாக இன்று ஆலோசனை நடத்துகின்றன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் இரு சபைகளிலும் வலியுறுத்தின. இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டன. தற்போது 12 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்திருப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் இந்த விவகாரத்தை நோக்கி மத்திய அரசு திசைதிருப்பி விட்டிருக்கிறது என்கிறார் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரைக் ஓ பிரைன்.

கூட்டத் தொடர் முழுவதும் புறக்கணிப்பு?
இதனிடையே 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் இன்று தங்களது முடிவை அறிவிக்க உள்ளன. அனேகமாக நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் முழுவதையுமே எதிர்க்கட்சிகள் கூண்டோடு புறக்கணிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் சிறிது நேரத்தில் இது தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.