"குளம், கிணறு இருக்கும்.. எல்லா மசூதிகளில் ரகசிய சர்வே எடுக்கணும்!" சுப்ரீம் கோர்ட்டில் புதிய வழக்கு
டெல்லி: நாட்டில் கிணறுகள் அல்லது குளங்கள் கொண்டு இருக்கும் பழங்கால மசூதிகள் குறித்த ரகசியமாக சர்வே கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்த மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாஜக பற்றிய திமுகவின் 3 பொய்கள் சுக்குநூறானது! பிரதமர் மோடி பேச்சால் வானதி சீனிவாசன் உற்சாகம்!
இருப்பினும், இங்கிருந்த இந்து கோயில் ஒன்றை இடித்துவிட்டே அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்த ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

ஞானவாபி மசூதி
மேலும், இந்த ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில், சிங்கார கவுரி அம்மன் சிலை அமைந்து உள்ளது. இந்த சிலைக்கு ஆண்டுக்கு ஒரு முறை பூஜைகளும் நடத்தப்படுகிறது. இதனிடையே இந்த அம்மன் சிலைக்குத் தினமும் பூஜை நடத்த அனுமதிக்கக் கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம், ஐந்து இந்து பெண்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவின் மீதான விசாரணையில், ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தவும், வீடியோ பதிவு செய்யவும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரகசிய சர்வே
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனிடையே நாட்டில் கிணறுகள் அல்லது குளங்கள் கொண்டு இருக்கும் பழங்கால மசூதிகள் குறித்த ரகசியமாக சர்வே முடிவுகள் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கிணறுகளைக் கொண்டிருக்கும் மசூதிகள் குறித்த இந்தியத் தொல்லியல் துறையின் ரகசிய சர்வே எடுக்க வேண்டும் என்று அதில் கூறி உள்ளனர். இதன் மூலம் நினைவுச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், தேவையற்ற வகுப்புவாத வெறுப்பு உணர்வு ஏற்படுவது தவிர்க்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள்
மேலும், பொதுவாக இஸ்லாமியர்கள் மசூதிக்குள் செல்லும் முன்பு, கை, கால்களைக் கழுவிச் சுத்தப்படுத்திக் கொள்வார்கள். இதற்கு wazu என்று பெயர். இந்நிலையில், நூற்றாண்டு பழமையான மசூதிகளில் இருக்கும் கிணறு மற்றும் குளங்களில் இந்த wazu முறையைப் பயன்படுத்தக் கூடாது என்றும் வழக்கறிஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சிவலிங்கம்
இது குறித்து டெல்லியைச் சேர்ந்த இரு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுவில் "ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள குளத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. முஸ்லிம்கள் wazu செய்யும் இடத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இத்தனை காலமாக இந்த குளத்தில் தான் wazu பழக்கம் செய்யப்படுகிறது. புனிதமான சிவலிங்கத்தின் மீது வேண்டுமென்றே தீங்கிழைக்கப்பட்டுள்ளது. இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் மற்றும் வழிபடப்படும் நினைவுச்சின்னங்கள் மீது வெறுப்பைப் பரப்பும் வகையிலும், இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் இது அமைந்துள்ளது.

வழிபாட்டுத் தலங்கள்
வரலாற்றில் இந்து/ஜைன/சீக்கிய/பௌத்த கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் சிதைக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் தெரியும். எனவே, இந்த பழங்கால வழிபாட்டுத் தலங்களில் உள்ள ஏராளமான நினைவுச்சின்னங்கள் இஸ்லாம் அல்லாத பிற மதங்களைச் சேர்ந்தவையாகவே இருக்கும். பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கம் ஆகியவை மூலம் பண்டைய மத நினைவுச் சின்னங்களைப் பராமரிக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.