'பல மடங்கு வேகமாக பரவும் ஓமிக்ரான்.. எச்சரிக்கையாக இருங்கள்.. அச்சம் வேண்டாம்..' பிரதமர் மோடி பேச்சு
டெல்லி: அதிகரித்து வரும் கொரோனா பரவல் குறித்து இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, ஓமிக்ரான் வேகமாகப் பரவி வருவதால் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த டிச. மாதம் வரை பல மாதங்களாகத் தினசரி கொரோனா பாதிப்பு மெல்லக் குறைந்தே வந்தது. ஆனால், ஓமிக்ரான் கொரோனா நிலைமையை அப்படியே தலைகீழாக மாற்றிப்போட்டது.
உலகின் பல்வேறு நாடுகளைப் போலவே இந்தியாவிலும் வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் 3ஆவது அலை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஷாக்! தமிழகத்தில் ஒரு லட்சத்தைத் தாண்டிய ஆக்டிவ் கேஸ்கள்.. உயிரிழப்புகளும் அதிகரிப்பு!

பிரதமர் ஆலோசனை
நமது நாட்டில் பல மாதங்களுக்குப் பிறகு தினசரி கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை இன்று மீண்டும் 2 லட்சத்தை எட்டியுள்ளது. வரும் காலத்தில் இந்த வைரஸ் பாதிப்பு மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. வைரஸ் பாதிப்பைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே மாநில அரசுகளுக்கும் இது தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து இன்று பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

எச்சரிக்கை தேவை
அதில் பேசிய பிரதமர் மோடி, "ஓமிக்ரான் உருமாறிய கொரோனா முந்தைய வகைகளை விடப் பல மடங்கு வேகமாகப் பரவி வருகிறது. நாம் அனைவரும் இப்போது நாங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஆனால் மக்கள் அச்சப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தப் பண்டிகைக் காலத்தில் மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு குறையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாழ்வாதாரம்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாம் எந்தவொரு திட்டத்தை அமல்படுத்தும் போதும், அது பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் குறைந்தபட்ச அளவே பாதிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வது மிகவும் முக்கியம். பொருளாதாரத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும். எனவே, உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகளில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. லேசான பாதிப்பு ஏற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு முடிந்தவரை வீடுகளிலேயே வைத்து சிகிச்சை அளிக்கலாம். இதற்காக டெலி மெடிசன் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" என்றார்.

வேக்சின் பணிகள்
தொடர்ந்து வேக்சின் பணிகள் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவில் 18+ வயதுடையவர்களில் சுமார் 92% பேருக்குக் குறைந்தபட்சம் ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. அதேபோல சுமார் 70% பேருக்கு 2 டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. 10 நாட்களில் 15-18 வயதானவர்களில் சுமார் 3 கோடி பேருக்கு வேக்சின் போட்டுள்ளோம். இது வரவிருக்கும் சவாலை எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளதைக் காட்டுகிறது.

100% வேக்சின்
அதேபோல முன்னெச்சரிக்கை டோஸ் நமது முன்களப் பணியாளர்களுக்கும் 60 வயதைக் கடந்தவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் 100% வேக்சின் என்ற இலக்கை அடைய வேக்சின் பணிகளை நாம் தீவிரப்படுத்த வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் போதிலும் தீவிர பாதிப்பால் ஆக்சின் உள்ளிட்ட மருத்துவ உதவிகள் தேவைப்படுவோரின் எண்ணிக்கை பெரியளவில் அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.