'ராமரை சந்தோஷப்படுத்தத் தீபாவளி அன்று.. இதை செய்யுங்கள்..' பிரதமர் மோடி கொடுக்கும் புதிய ஐடியா
டெல்லி: பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பயன்பெற்ற அனைவரும் தீபாவளி அன்று 2 விளக்குகளை ஏற்ற வேண்டும் என்றும் இதன் மூலம் ராமரை மகிழ்விக்க முடியும் என்றும் பிரமதர் மோடி தெரிவித்தார்.
ராமாயணத்தில் ராமர் 14 ஆண்டுகள் காட்டில் இருந்து விட்டுத் திரும்பியது தீபாவளி என்று கொண்டாடப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் தீபாவளி அன்று விளக்குகள் ஏற்றப்பட்டு தீபோத்சவம் நடைபெறும்.
கடந்த 4 ஆண்டுகளாகவே தீபாவளி தினத்தில் இது போன்ற தீபோத்சவம் நடைபெறுகிறது. 5ஆம் ஆண்டாக இந்த ஆண்டும் இந்த தீபோத்சவம் நடைபெறும் நிலையில் இந்த மெகா நிகழ்விற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது.
'அவர் அமைச்சர் மட்டுமல்ல..அதுக்கும் மேல..' கிரண் ரிஜிஜூ கலக்கல் டான்ஸ்: பாராட்டி தள்ளிய பிரதமர் மோடி

அயோத்தியில் 7.5 லட்சம் தீபங்கள்
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பிரமதரின் கட்டும் திட்டமான பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. காணொலி மூலம் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, "மக்களே நான் உங்களுக்கு ஒரு டாஸ்க் தருகிறேன். உத்தரப் பிரதேசத்தில் மட்டும் மொத்தம் 9 லட்சம் பேர் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பயன் அடைந்துள்ளனர். இத்திட்டத்தில் பயன்பெற்ற ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் இரண்டு தீபங்களையாவது ஏற்றுங்கள். அப்படி ஏற்றினால் மாநிலம் முழுவதும் தீபாவளியன்று 18 லட்சம் தீபங்கள் ஏற்றப்படும். அயோத்தியில் மட்டும் 7.5 லட்சம் தீபங்கள் ஏற்றப்படும்.

மகிழ்ச்சியாக்க முடியும்
இதன் மூலம் நாம் இறைவன் ராமரை மகிழ்ச்சியாக்க முடியும்" என்று அவர் தெரிவித்தார். கடந்த 2019ஆம் ஆண்டில், அயோத்தியில் தீபாவளி தினத்தன்று 4.1 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டது. அதேபோல 2020ஆம் ஆண்டு அயோத்தியில் 6.06 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது. இந்த ஆண்டு, உபியில் ஆட்சியிலுள்ள யோகி ஆதித்யநாத் அரசு தனது முந்தைய சாதனையை முறியடிக்கத் திட்டமிட்டுள்ளது. கொரோனா காலத்திலும் அதற்குத் தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.

மோடி அரசு
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "இதற்கு முன்பு வரை குடும்பத்தில் கணவன் அல்லது மகன் பெயரில் மட்டுமே வீடுகள் இருந்தன. ஆனால், பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் வீடுகளை வைத்திருக்கும் உரிமைகளை இந்த அரசு பெண்களுக்கு வழங்கியுள்ளது. ஒரு ஆரோக்கியமான சமூகத்தில் சமநிலை இருக்க வேண்டும். இதையெல்லாம் யோசித்தே எங்கள் அரசு இந்த முடிவை எடுத்தோம்.

வீடு கட்டும் திட்டம்
கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முன்பு வரை வீடு குறித்து எந்தவொரு பாலிசியும் இல்லாமல் இருந்தது பல இடங்களில் 15 சதுர மீட்டர் மற்றும் 17 சதுர மீட்டர் நிலத்தில் எல்லாம் வீடுகள் கட்டப்பட்டன. அதில் எந்த குடும்பத்தாலும் வசிக்க முடியாது. இதனால் தான் நாங்கள் வீடு கட்டும் நில அளவை அதிகரித்தோம். 22 சதுர மீட்டர் அடிக்குக் கீழ் இத்திட்டத்தில் வீடுகளைக் கட்ட கூடாது என்று உத்தரவிட்டோம். மேலும் பயனாளிகளின் கணக்குகளுக்கு நேரடியாகப் பணத்தை மாற்றத் தொடங்கினோம். இதன் மூலம் இத்திட்டத்தில் தேவையான பயனாளிக்குச் சரியான முறையில் பணம் சென்று சேர்ந்தது"என்று அவர் கூறினார்.