உக்ரைன் போருக்கு பேச்சுவார்த்தை தான் தீர்வு! ரஷ்ய அதிபர் புதினிடம் வலியுறுத்திய பிரதமர் மோடி!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது இந்தியா-ரஷ்யா இடையேயான வர்த்தகம் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் உக்ரைன் போர் தொடர்பாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என மீண்டும் ஒருமுறை விளாடிமிர் புதினிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் அமெரிக்கா, பிரிட்டன் உள்பட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இருப்பினும் இந்த விஷயத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது. இதனால் இந்தியா-ரஷ்யா இடையே சுமூகமாக உறவு உள்ளது.
அசாம் சொகுசு ஹோட்டலில் 8 நாட்கள் தங்கிய ஷிண்டே, அதிருப்தி எம்.எல்.ஏக்கள்.. பில் எவ்வளவு தெரியுமா?

புதினுடன், மோடி பேச்சு
இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசினார். பிப்ரவரி 24ல் உக்ரைன் மீது ரஷ்யா போர்தொடுத்த நிலையில் இருநாட்டு தலைவர்களும் இன்று 4வது முறையாக தொலைபேசியில் பேசினர். இதற்கு முன்பு பிப்ரவரி 24, மார்ச் 2 மற்றும் மார்ச் 7 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேசினர்.

வர்த்தகம் பற்றி பேசிய மோடி
மேலும், இந்தியா-ரஷ்யா உறவு, வர்த்தகம் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2021 டிசம்பரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இந்திய பயணத்தின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். குறிப்பாக, விவசாயப் பொருட்கள், உரங்கள் மற்றும் மருந்து பொருட்களில் இருதரப்பு வர்த்தகம் மேற்கொள்வது பற்றி பேசினர். இதுதொடர்பாக இருநாட்டு தலைவர்களும் கருத்துகளை பரிமாறி கொண்டனர். மேலும் சர்வதேச எரிசக்தி மற்றும் உணவு சந்தைகளின் நிலை உட்பட உலகளாவிய பிரச்சனைகள் பற்றியும் விவாதித்தனர்'' என கூறப்படுகிறது.

உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தை
இன்றைய பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாகவும்பேசியதாகவும் கூறப்படுகிறது. அப்போது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் விளாடிமிர் புதினிடம் வலியுறுத்தி உள்ளார். உக்ரைன் மீதான போர் நடவடிக்கைக்கு பிறகு ரஷ்யா சார்பில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் தள்ளுபடி விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

ஜி7 மாநாட்டுக்கு பிறகு
இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு ஜெர்மனியில் ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் விலாடிமிர் புதின், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்பட ஜி7 நாடுகளின் தலைவர்கள் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை கண்டித்தனர். ஆனால் இந்தியா ரஷ்யாவை விமர்சனம் செய்ய வில்லை. இந்நிலையில் தான் தற்போது பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசியுள்ளார்.