“மக்கள்தான் முக்கியம்.. மத்தது அப்புறம்தான்” - பெட்ரோல் விலை குறைப்பு பற்றி பிரதமர் தட்டிய ட்வீட்!
டெல்லி: மக்கள்தான் எப்போதும் நமக்கு முதன்மை என்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு தொடர்பான முடிவுகள் பல்வேறு துறைகளுக்கு சாதகமாக அமையும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதன்மூலம் பெட்ரோல், டீசல் விலை வெகுவாக குறையவிருக்கிறது. அரசின் இந்த முடிவு, மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
பெட்ரோல் விலையை நாங்க குறைச்சுட்டோம்.. திமுக அரசு எப்போது குறைக்கும்? - அட்டாக் மோடில் அண்ணாமலை

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு
பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதனால் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலையில் 7 ரூபாயும் குறையும் என அவர் தெரிவித்துள்ளார். கலால் வரி இழப்பால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
தற்போது சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85, டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94க்கு விற்பனையாகிறது. கடந்த 45 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமின்றி இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலால் வரியை குறைத்துள்ளதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை இன்று நள்ளிரவு முதலே குறையவிருப்பதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பிரதமர் மோடி
இந்நிலையில், கலால் வரி குறைப்பு உள்ளிட்ட முடிவுகள் குறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, மக்கள்தான் எப்போதும் நமக்கு முதன்மை. இன்றைய முடிவுகள், குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு தொடர்பான முடிவுகள் பல்வேறு துறைகளுக்கு சாதகமாக அமையும். இது மக்களுக்கு நிவாரணம் அளிப்பதோடு மட்டுமின்றி அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

குடும்பங்களின் பட்ஜெட்டை எளிதாக்கும்
மேலும் கேஸ் சிலிண்டருக்கு ரூ. 200 மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு குறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, உஜ்வாலா யோஜனா திட்டம் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு உதவியுள்ளது. உஜ்வாலா திட்ட மானியம் குறித்த இன்றைய அறிவிப்பு குடும்பங்களின் பட்ஜெட்டை மிகவும் எளிதாக்கும் என தெரிவித்துள்ளார்.