பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ14,000 கோடி மோசடி... ஆன்டிகுவா-வில் இருந்தும் மெகுல் சோக்சி தப்பி ஓட்டம்!
டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ14,000 கோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டதால் நாட்டைவிட்டு தப்பி ஓடி ஆன்டிகுவாவில் பதுங்கி இருந்த மெகுல் சோக்சி தற்போது அங்கிருந்தும் தப்பி ஓடி கியூபாவில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ14,000 கோடி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு மெகுல் சோக்சி, அவரது உறவினர் நீரவ் மோடி ஆகிய இருவரும் இந்தியாவை விட்டு தப்பி ஓடினர். இவர்களில் மெகுல் சோக்சி, கரீபியன் நாடுகளில் ஒன்றான ஆன்டிகுவாவில் பதுங்கி இருந்தார்.

அத்துடன் அந்த நாட்டின் குடியுரிமையையும் பெற்றதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து மெகுல் சோக்சியை ஆன்டிகுவா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சிகள் முனைப்பாக மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் ஆன்குடிவா நாட்டில் இருந்து 2 நாட்களுக்கு முன்னர் மெகுல் சோக்சி மாயமானார். இது தொடர்பாக ஆன்டிகுவா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனிடையே தப்பி ஓடிய மெகுல் சோக்சி, கியூபாவில் தஞ்சம் அடைந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
நீரவ் மோடி லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. நீரவ் மோடியையும் இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.