பூதாகரமாக கிளம்பும் மின் வெட்டு பிரச்சினை.. நிலக்கரி, மின்சாரத் துறை அமைச்சர்களுடன் அமித் ஷா ஆலோசனை
டெல்லி: தமிழ்நாடு உட்பட இந்தியா முழுக்க பல மாநிலங்களில் மின் வெட்டு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. நாடு முழுக்க நிலக்கரி இருப்பு தட்டுப்பாடு நிலவுவது இதற்கு காரணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா , மின்சாரத்துறை அமைச்சர் ஆர்கே சிங் மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோருடன் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
குட் நியூஸ்.. தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
இந்தியா முழுக்க 135 அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவைதான் மொத்த நாட்டு மின் தேவையில் 70 சதவீதம் அளவுக்கு பூர்த்தி செய்கின்றன. ஆனால் மொத்த அனல் மின் நிலையங்களில் பாதிக்கும் மேலான அனல் மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு வெறும் மூன்று நாட்களுக்கு மட்டுமே இருப்பதாக செய்திகள் வெளியாகின.

அமித் ஷா ஆலோசனை
இதனால் மூன்று நாளைக்கு பிறகு நாடு முழுக்க மின்வெட்டு பிரச்சினை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக அச்சம் உருவானது. இந்த நிலையில்தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மின்சாரத்துறை மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, தேசிய அனல் மின் நிலைய கழகத்தின் உயரதிகாரிகள் , மின்சார துறை மற்றும் நிலக்கரித் துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

பொருளாதார நடவடிக்கைகள்
உலகம் முழுக்க நிலக்கரிக்கான தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அதன் விலையும் அதிகரித்துள்ளது. அதேநேரம் சப்ளை குறைவாக உள்ளது.
உலகத்தின் பல நாடுகளில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த காரணத்தால், பொருளாதார நடவடிக்கைகள் தேக்கம் அடைந்து இருந்தன. எனவே, தொழிற்சாலைகள் போன்ற அதிகமாக மின்சார நுகர்வு கொண்டவற்றுக்கு, மின் சப்ளை தேவைப்படாத காரணத்தால், நிலக்கரி உற்பத்தி குறைக்கப்பட்டது. தற்போது உலகம் முழுக்க இயல்பு நிலை திரும்பி வருவதால் நிலக்கரிக்கான தேவை மற்றும் மின்சாரத்திற்கான தேவை அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.

அதிக மின்சார தேவை
அக்டோபர் 8ம் தேதி இந்தியாவில் மின்சாரத்தின் நுகர்வு 3 ஆயிரத்து 900 மெகா யூனிட் என்ற அளவுக்கு இருந்துள்ளது. இது சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். நிலக்கரி தட்டுப்பாட்டுக்கு நடுவே மின்சார தேவை அதிகரித்து இருப்பது மற்றொரு பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. வடக்கு மற்றும் வடமேற்கு டெல்லி பகுதிகளுக்கு மின்சாரம் சப்ளை செய்யக்கூடிய டாடா பவர் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள எஸ்எம்எஸ் தகவலில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுவதால் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சார விநியோகத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம் எனவே மக்கள் மின்சாரத்தை தேவையான அளவுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். தடங்கலுக்கு வருந்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வட மாநிலங்கள்
டெல்லியில் உள்ள பல மின்சார உற்பத்தி நிலையங்கள் மொத்த உற்பத்தி திறனில் 55 விழுக்காடு மட்டுமே செயல்பட்டு வருகின்றன . பஞ்சாப் மாநிலத்திலும் அவ்வபோது மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. ஜார்கண்ட் , பீகார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் அவ்வப்போது மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு போன்றவற்றுக்கு மத்தியில் நிலக்கரி விலை உயர்வு காரணமாக மின்சார கட்டணம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டு இருப்பது போன்றவை மக்களை திடுக்கிட வைத்துள்ளன.