"மாஸ்டர் பிளான்!" காங்கிரஸ் கட்சியில் இப்படி தான் இணைய போகிறாரா பிகே.. என்னவாகும் மிஷன் 2024
டெல்லி: பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என்று கூறப்படும் நிலையில், இது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இதனால் காங்கிரஸ் தலைமையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாகக் கட்சிக்கு வெளியே மட்டுமின்றி, கட்சிக்கு உள்ளேயும் கூட தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பலரும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
சந்திரசேகர ராவுடன் கூட்டணியா? தெலுங்கானாவில் பிரசாந்த் கிஷோர் திடீர் முகாம்! ஐபேக் உடன் ஒப்பந்தம்..!

பிரசாந்த் கிஷோர்
இந்த ஒரு சூழலில் தான், பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சோனியா காந்தியைச் சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார். இதற்காக சில நாட்கள் இடைவெளியில் அவர் காங்கிரஸ் தலைமையை இரு முறை சந்தித்து இருந்தார். 2024ஆம் ஆண்டிற்குள் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பது தொடர்பாகவும் அதற்கான திட்டத்தையும் பிகே காங்கிரஸ் தலைமையிடம் முன்மொழிந்து இருந்தார்.

முக்கிய ஆலோசனை
பிகே விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான இந்த குழுவில் மூத்த தலைவர்களான கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக், அம்பிகா சோனி, ஜெய்ராம் ரமேஷ், திக்விஜய சிங், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு பிகே உடனும் கூட ஆலோசனை நடத்தி இருந்தது. இந்த குழு இறுதி அறிக்கையை சோனியா காந்தியிடம் நேற்று சமர்ப்பித்து இருந்தது.

அடுத்த திட்டம்
பிகே திட்டம் தொடர்பாகக் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நேற்று சோனியா காந்தி உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் சோனியா காந்தியே முடிவு எடுப்பார் என்று கூறப்படுகிறது. பிரசாந்த் கிஷோர் விவகாரத்தில் நேற்றைய தினமே முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அதற்குப் பதிலாக 2024 தேர்தல்களுக்கு முன் இருக்கும் சவால்களை எதிர்கொள்ள ஒரு அதிகாரமளிக்கப்பட்ட செயற்குழுவை உருவாக்குவதாகக் காங்கிரஸ் தலைமை அறிவித்தது.

காங். குழுவில் பிகே
இந்நிலையில், இந்த குழுவில் பிரசாந்த் கிஷோர் இடம் பெறுவார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்குக் காங்கிரஸ் கட்சியில் யாரும் பெரியளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. அதேநேரம் வரும் காலத்தில் அவருக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என்பதில் கட்சிக்குள் மாறுபட்ட கருத்துகள் உள்ளதால் சில காலம் கழித்து அந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரே நிபந்தனை
வரும் 2024 பொதுத்தேர்தலுக்கு புதிய நபர் ஒருவரைப் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்த வேண்டும் என்ற பிகேவின் திட்டத்தை 8 பேர் கொண்ட சிறப்புக் குழு ஒப்புக்கொண்டதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. பிகே காங்கிரஸ் கட்சியில் இணைவதில் பிரச்சினை இல்லை என்றாலும் கூட அவர், இனி பிற கட்சிகள் உடன் இணைந்து பணியாற்றக் கூடாது என்ற நிபந்தனையைக் காங்கிரஸ் சிறப்புக் குழு முன் வைத்துள்ளது.
Recommended Video - Watch Now

ஆதரவு எதிர்ப்பு யார்
பிகே காங்கிரஸ் கட்சியில் இணைவதில் சிறப்பு குழுவில் பிளவுபட்ட கருத்தே நிலவுகிறது. பிரியங்கா காந்தி மற்றும் அம்பிகா சோனி ஆகியோர் அவருக்கு ஆதரவாக உள்ளனர். திக்விஜய சிங், முகுல் வாஸ்னிக், ரந்தீப் சுர்ஜேவாலா மற்றும் ஜெய்ராம் ரமேஷ் அவருக்கு எதிராக உள்ளனர். பல்வேறு விவகாரங்கள் குறித்து இறுதி ஆலோசனை நடத்தப்பட்ட பிறகே இதில் காங். தலைமை இறுதி முடிவை எடுக்கும். இன்னும் ஓரிரு நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.