"நேதாஜிக்கு நான் தலைவணங்குகிறேன்.." புகழ்ந்த பிரதமர் மோடி.. ஹாலோகிராம் சிலையையும் திறந்து வைக்கிறார்
டெல்லி: நாட்டின் குடியரசு தின விழா கொண்டாட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கியமான மற்றும் துணிச்சலான தலைவர்களில் ஒருவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஒடிசாவின் கட்டாக் நகரில் பிறந்தவர்.
இந்திய விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய நேதாஜி, அதற்காக ஒரே ராணுவத்தையே கட்டமைத்தார். அவரது 125ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
குடியரசு தின விழா! காந்தியடிகளுக்கு பிடித்த பாடலை நீக்குவதா? மத்திய அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!

ஹாலோகிராம் சிலை
இதனிடையே டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் ஹாலோகிராம் சிலையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை திறந்து வைக்கிறார். இந்த ஹாலோகிராம் சிலை 30,000 லுமன்ஸ் 4K புரொஜெக்டரால் ஒளியூட்டப்படும். இதற்காக 90 சதவீதம் டிரான்ஸ்பரெண்டாக இருக்கும் ஹாலோகிராபிக் திரை அங்கு அமைக்கப்பட்டுள்ளது. அதில் தான் நேதாஜியின் முப்பரிமாணப் படம் காட்டப்படும். ஹாலோகிராம் சிலை 28 அடி உயரமும், 6 அடி அகலமும் கொண்டதாக இருக்கும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவணங்குகிறேன்
இது தொடர்பாகப் பிரதமர் மோடி தனது ட்விட்டரில், "அனைத்து நாட்டு மக்களுக்கும் பராக்கிரம் திவாஸ் வாழ்த்துகள். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாளில் அவருக்கு எனது அஞ்சலிகள். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு அவரது பிறந்த நாளான இன்று தலைவணங்குகிறேன். நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பைக் கண்டு ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்கிறான்" என்று அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

குடியரது தின கொண்டாட்டம்
வழக்கமாக நமது நாட்டில் குடியரசு தின கொண்டாட்டங்கள் ஜனவரி 24ஆம் தேதி முதல் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு முதல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பங்களிப்புக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்று (ஜனவரி 23) முதலே குடியரசு தின விழா கொண்டாட்டங்களைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1897ஆம் ஆண்டு ஜனவரி 23இல் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவணப்படம்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸைக் கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அவரது வாழ்க்கை வரலாற்றைக் கொண்ட இணையதளத்தையும் அவர் தங்கிய முக்கிய இடங்களையும் பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இன்றைய தினம் நேதாஜி குறித்து இரண்டு ஆவணப்படங்களையும் வெளியிடப்போவதாக மத்திய ஒலிபரப்பு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.