எமர்ஜென்சி மூலம் ஜனநாயகத்தை நசுக்கியது காங்கிரஸ்தான்.. மன் கி பாத் உரையில் மோடி கடும் விமர்சனம்!
டெல்லி: இந்தியாவில் எமர்ஜென்சி அமல்படுத்தியதன் மூலம் ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சியில் காங்கிரஸ் அரசு ஈடுபட்டது என்று மன் கி பாத் உரையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
பரபரக்கும் மகாராஷ்டிர அரசியல் சதுரங்கம்.. ஏக்நாத் ஷிண்டே முன் இருக்கும் ”5 வாய்ப்புகள்”
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார். அதன்படி, இந்த மாதத்திற்கான மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில், எமர்ஜென்சி, விண்வெளித் துறையின் வளர்ச்சி, மிதாலி ராஜ், நீரஜ் சோப்ரா ஆகியோர் பற்றி பேசியுள்ளார்.

எமர்ஜென்சி பற்றி மோடி
எமர்ஜென்சி குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 1975ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தான் இந்தியாவில் எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்டு மக்களின் உயிர் வாழ்வதற்கான சுதந்திரம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. இந்தியாவின் ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி, எமர்ஜென்சி மூலம் செய்யப்பட்டது. ஏன் அரசுக்கு ஆதரவாக பேச மறுத்ததால், பிரபல பாடகர் கிஷோர் குமாருக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் எமர்ஜென்சிக்கு பிறகு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. இறுதியாக எங்களின் ஜனநாயகம் வெற்றிபெற்றது என்று தெரிவித்தார்.

விண்வெளித் துறையில் வளர்ச்சி
தொடர்ந்து விண்வெளித் துறையில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து பேசிய பிரதமர் மோடி, அண்மைக் காலங்களில் விண்வெளித்துறை பெரும் வளர்ச்சியைக் கண்டு வருகிறது. விண்வெளித் துறையில் தனியாருக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. 2019ஆம் ஆண்டுக்கு முன், விண்வெளித் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்கெடுப்பது அரிதான விஷயம். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக சூழல் மாறியுள்ளது. இளைஞர்கள் புதிய சிந்தனைகளுடன் செயல்பட்டு வருவதாக பாராட்டியுள்ளார்.

நீரஜ் சோப்ரா
தொடர்ந்து ஃபின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச குவார்டேன் கேம்ஸ் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். நீரஜின் பழைய சாதனையை அவரே முறியடித்ததோடு, இந்தியாவுக்கும் பெருமை தேடி கொடுத்துள்ளதாக பாராட்டியுள்ளார். இதுமட்டுமல்லாமல் கேலோ இந்தியா போட்டியில் வெற்றிபெற்றவர்கள் பலரும் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்றும், மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்தும் பேசியுள்ளார்.

மிதாலி ராஜ்
தொடர்ந்து அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட்டர் மிதாலி ராஜ் குறித்து பிரதமர் மோடி பேசினார். அதில், மிதாலி ராஜ் ஒரு அசாதாரணமான கிரிக்கெட் வீராங்கனை. அவர் எண்ணற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமாக திகழ்ந்து வருகிறார். அவர் வாழ்வின் இரண்டாவது இன்னிங்ஸ் சிறப்பாக அமைய வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்தார்.