"பிகே பிளானே வேற.. அதை ராகுல் அப்போதே கணித்தார்!" காங். மூத்த தலைவர் பரபர.. அப்படி என்ன திட்டம்
டெல்லி: பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய மறுத்துள்ள நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி, அதன் பின்னர் தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாகத் தோல்விகளையே சந்தித்து வந்தது.
இதன் காரணமாகக் காங்கிரஸ் கட்சியில் முக்கிய நிர்வாக சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்று கட்சிக்குள்ளேயே பலரும் வலியுறுத்தத் தொடங்கினர்.
காங்கிரஸில் இணையாத பிரசாந்த் கிஷோர்... 4 முக்கிய காரணங்கள்... பரபரப்பு தகவல்கள்

தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்
இது கட்சியின் தலைமைக்கு அழுத்தத்தை அதிகரித்தது. இந்தச் சூழலில், கடந்த வாரம் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சோனியா காந்தியைச் சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார். 2024ஆம் ஆண்டிற்குள் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பது தொடர்பாகவும் அதற்கான திட்டத்தையும் பிகே காங்கிரஸ் தலைமையிடம் முன்மொழிந்து இருந்தார். பிகே விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது,

மறுப்பு
இந்த குழு சமீபத்தில் தான் இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த விவகாரத்தில் பல்வேறு கட்டங்களாக ஆலோசனைகள் நடந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய மறுத்துவிட்டதாகக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜேவாலா நேற்று முன்தினம் அறிவித்தார். காங்கிரஸ் கட்சியின் அதிகாரம் அளிக்கப்பட்ட செயற்குழுவில் இணைந்து பணியாற்ற பிகே மறுத்துவிட்டதாகவும் சுர்ஜேவாலா குறிப்பிட்டார்.

பின்னணி
காங்கிரஸ் கட்சியில் பிகே இணைவது கிட்டதட்ட உறுதி என்று கூறப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரம் பிகே ஏன் காங்கிரஸ் கட்சியில் இணைய மறுத்தார் எனத் தெரியவில்லை என்று மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்தார். இந்நிலையில், இது குறித்துக் கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது காங்கிரஸ் தலைவரின் அரசியல் செயலாளராகவோ அல்லது துணைத் தலைவராகவோ இருக்க பிகே விரும்புவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் உடன்பாடு ஏற்படாததாலேயே பிகே கட்சியில் இணையவில்லை என்றும் கூறப்படுகிறது.

ராகுலுக்கு தெரியும்
இது குறித்து காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், "இந்த விவாதங்கள் தொடங்கிய முதல் நாளே பிகே காங்கிரஸில் இணைய வாய்ப்பில்லை என்று ராகுல் காந்தி தொடர்ந்து கூறினார். காங்கிரஸ் கட்சியில் அவருக்குப் பதவி அளிக்கப்பட்டது இது முதல்முறை இல்லை. காங்கிரஸ் கட்சியில் சேர்வது தொடர்பாக பிகே ஆலோசிப்பது இது 8ஆவது முறை. பிகே அவராக முன்வந்தே காங்கிரஸ் தலைவர்கள் மூலம் இத்திட்டத்தை முன்மொழிந்தார்.

டவுட் தான்
பிகே முன்மொழிந்துள்ள திட்டம் குறித்து பல்வேறு தலைவர்களும் தங்கள் ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். அதேநேரம் பிகே காங்கிரஸ் கட்சியில் இணைவது தொடர்பாக யாரும் பாசிட்டிவ் கருத்துகளைக் கூறவில்லை" என்று தெரிவித்தார். பிகே திட்டத்தை ஆராய்ந்த குழுவில் இடம் பெற்றிருந்த பலரும் கூட, அவரை (பிகே) நம்புவது கடினம் என்றும் காங்கிரஸை தளமாக வைத்துக் கொண்டு மற்ற கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதே அவரது திட்டம் என்றும் கூறி இருந்தனர்.

ஐபேக்
பிகே காங்கிரஸ் கட்சியில் இணைந்தாலும் கூட அவரும் ஐபேக் நிறுவனமும் மற்ற கட்சிகளுடன் இணைந்து பணியாற்றக் கூடாது என்றே காங். மூத்த தலைவர்கள் வலியுறுத்தி இருந்தார். அதற்கு ஐபேக் நிறுவனத்தில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்று கூறிய பிகே, அதில் ஆலோசகராக மட்டுமே இருந்ததாகவும் எனவே அவர்கள் யாருடன் இணைந்து பணியாற்றலாம் யாருடன் இணையக் கூடாது என்பதை தன்னால் கூற முடியாது என்று கூறி இருந்தார்.

இரு தரப்பும் சந்தேகம்
காங்கிரஸ் கட்சியை மீண்டும் கட்டமைக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இருப்பினும், அதில் காங்கிரஸ் எவ்வளவு தூரம் தயாராக உள்ளது என்பதில் பிகேவுக்கு சந்தேகம் உள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். அதேநேரம் காங்கிரஸும் அதன் தலைமையும் பிகே திட்டங்களை முழுமையாக ஆதரிக்கும் போதிலும், அவர் கட்சியை நம்பவில்லை என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.