காச பாத்தா காந்தி தாத்தா.. ரூபாய் நோட்டில் ரவீந்திரநாத் தாகூர்,அப்துல் கலாம்? ஆர்பிஐ திடீர் முடிவு?
டெல்லி : நிதி அமைச்சகமும், இந்திய ரிசர்வ் வங்கியும் ரூபாய் நோட்டுகளில் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் ஆகியோரின் படங்கள் மற்றும் விவரங்களை புதிய வரிசை ரூபாய் நோட்டுகளில் பயன்படுத்த பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது நாம் பயன்படுத்தும் அனைத்து வகை ரூபாய் நோட்டுகளில் தேசத்தின் தந்தையாக கருதப்படும் மகாத்மா காந்தியின் படம் இடம் பெற்றுள்ளது அனைவருக்கும் தெரிந்தது தான். இன்று நேற்றல்லா சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது.
மகாத்மா காந்தியின் 100வது பிறந்தநாளை கொண்டாட்டத்தை முன்னிட்டு 1969ஆம் ஆண்டில் டிசைன் சீரிஸ் வெளியிடப்பட்ட போது அவரது படம் முதன்முதலில் இந்திய ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றது.
மத்திய பாஜக ஆட்சியில் ரூ2,000 கள்ள நோட்டு 54%; ரூ500 கள்ள நோட்டு 102% அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி ஷாக்

இந்தியா ரூபாய்
இந்நிலையில் இந்தியாவின் முன்னணி ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலின் படி, ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகத்தின் கீழ் வரும் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை ரூபாய் நோட்டுகளில் காந்தி அவர்களின் புகைப்படத்தோடு ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் ஆகியோரின் படங்கள் மற்றும் விவரங்களை புதிய வரிசை ரூபாய் நோட்டுகளில் பயன்படுத்த பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய் மாதிரிகள்
இதுகுறித்து வாட்டர்மார்க்குகள் கொண்ட இரண்டு தனித்தனி மாதிரிகளை அது அமைச்சகத்துக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. ஐஐடி-டெல்லி எமரிட்டஸ் பேராசிரியர் திலிப் டி ஷஹானி, இரண்டு மாதிரிகளில் இருந்து ஒன்றினை தேர்வு செய்து அரசாங்கத்தின் இறுதி பரிசீலனைக்கு வழங்கும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தாகூர், கலாம் படங்கள்
மகாத்மா காந்தியைத் தவிர மற்ற பிரபலங்களின் படங்களை ரூபாய் நோட்டுகளில் பயன்படுத்த ரிசர்வ் வங்கி பரிசீலிப்பது இதுவே முதல் முறை ஆகும். ஒன்று அல்லது மூன்று படங்களைத் தேர்ந்தெடுப்பது குறித்த இறுதி முடிவு "உயர் மட்டத்தில்" எடுக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இதுகுறித்து இதுவரை உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை.

குழு அறிக்கை
2017ஆம் ஆண்டில், புதிய வரிசை ரூபாய் நோட்டுகளுக்கான புதிய பாதுகாப்பு அம்சங்களைப் பரிந்துரைப்பதற்காக உருவாக்கப்பட்ட ரிசர்வ் வங்கியின் உள் கமிட்டிகளில் ஒன்று, 2020இல் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதில் ரூபாய் நோட்டுகளில் காந்தியைத் தவிர, தாகூர் மற்றும் கலாமின் வாட்டர்மார்க் விவரங்களும் இருக்க வேண்டும் என்று முன்மொழிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.