'விக்ரமன் படம் இல்லை, ஹரி படம்'.. டெல்லி.. பஞ்சாப் அடுத்தடுத்து மாஸ் காட்டும் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி: டெல்லியில் கொடிநாட்டிய ஆம் ஆத்மி கட்சி, இப்போது பஞ்சாப் சிம்மாசனத்தை அலங்கரிக்கிறது. ஆம் ஆத்மியை அகில இந்திய அளவில் கொண்டு செல்லும் திட்டத்துடன் அடுத்தடுத்த காய்களை கவனத்துடன் நகர்த்தி வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் கோவா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியமைக்கிறது. யாருமே எதிர்பார்க்காத வகையில், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது.
பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கும் என தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் யாராவது சொல்லி இருந்தால், ஒருவரும் அதை நம்பி இருக்க மாட்டார்கள். ஆனால் முடியாததை இன்று முடித்துக்காட்டி இருக்கிறது ஆம் ஆத்மி கட்சி.

ஆம் ஆத்மி
ஆம் ஆத்மி கட்சி தொடங்கியதெல்லாம் தனிக்கதை, ஆனால் அதன்பிறகான வளர்ச்சி என்பது பிரம்மிக்கவைக்கும் விதத்திலேயே இருக்கிறது. நடந்து முடிந்த பஞ்சாப் தேர்தலே அதற்கு சாட்சி. மிகப்பெரிய காங்கிரஸ் கட்சியை, ஒரு மாநிலத்தை ஆண்டுகொண்டிருந்த ஒரு கட்சியை அதே இடத்தில் ஒன்றுமில்லாமல் செய்வது வேற லெவல். ஒரு மாஸ் படம் பார்த்திருப்போம், வில்லன்களின் இடத்துக்கே சென்று, அடித்து உதைத்து, வில்லன்களை மண்டியிடவைத்து அவர்களை ஒன்றுமில்லாமல் செய்வார் ஹீரோ. அது மக்களுக்குப் பிடித்துவிட்டால், அவர் மாஸ் ஹீரோ.

மாஸ் ஹீரோ
அப்படிப்பட்ட மாஸ் ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். 'குஜராத் மாடல்' என்று சொல்லி மத்தியில் ஆட்சியைப் பிடித்தது பாஜக. அதே வித்தையை கொஞ்சம் மாற்றி, 'டெல்லி மாடல்' என மக்களை சொல்லவைத்து இன்று பஞ்சாபில் வெற்றியை ருசிக்க வைத்திருக்கிறார் கெஜ்ரிவால். 'இது சாதா மூளை இல்ல; ஐ.ஆர்.எஸ் மூளை'' என தன்னுடைய ஒவ்வொரு நகர்விலும் மாஸ் காட்டி வருகிறார். டெல்லி மாடல் மக்களுக்குப் பிடித்துவிட்டது, அதிகாரம் சரியாக பயன்பட்டால் போதும் என மக்கள் நினைத்துவிடவே, கொள்கைகள் தேவையற்று போய்விட்டது. அதுதான் பஞ்சாப் மாநிலத்திலும் நிகழ்ந்துள்ளது.

பஞ்சாப் தேர்தல்
2012 பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் நடந்த போது, ஆம் ஆத்மி என்ற கட்சியே உருவாகவில்லை. அடுத்து நடந்த 2017 தேர்தலில் மொத்தம் உள்ள 117 இடங்களில் 20 இடங்களைக் கைப்பற்றியது ஆம் ஆத்மி கட்சி. அதன்பிறகு நடந்த 2019 பொதுத்தேர்தலில் பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளில், ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிட்டு ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் 7.3% வாக்குகளைப் பெற்றது. தனித்துப் போட்டியிட்டு மக்கள் நம்பிக்கையை சம்பாதித்த கட்சிக்கு, அடுத்து வரும் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடும் நம்பிக்கை வந்தது.

அரவிந்த் கெஜ்ரிவால்
2022 தேர்தல் ஆம் ஆத்மிக்கு எளிதாக இருந்ததாகவே சொல்லலாம். 'ஒரு மொக்கை வில்லன் இருந்து, சுவாரஸ்யமே இல்லாம ஒரு திரைக்கதை இருந்தா, வில்லன்களை காலி பண்ண ஹீரோ பெரிய மெனக்கடல் பண்ணவே தேவையில்லை'. அதைத்தான்
கெஜ்ரிவாலும் செய்தார். டிஜிட்டல் பிரசாரங்கள் மேற்கொண்டார், ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளரை மக்களே முடிவு செய்வார்கள் என்று இளைஞர்களை கவர்ந்தார். மக்களோடு மக்களாக நெருங்கினார். அதே நேரம் விவசாயிகள் போராட்டத்தால் பஞ்சாப் மாநிலத்தில் பாஜக மொத்தமாக தூக்கியெறியப்பட்டிருந்தது. காங்கிரஸில் உட்கட்சி பூசல், முதல்வர் வேட்பாளர் பிரச்சனை, முன்னாள் முதல்வர் தனிக்கட்சி என்று காங்கிரஸ் ஆட்டம் கண்டிருந்தது. இதையெல்லாம் தனக்கு சாதமாக பயன்படுத்தினார் கெஜ்ரிவால்.

மாஸ் வெற்றி
விளைவு.. படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட். பஞ்சாபில் மொத்தம் உள்ள 117 இடங்களில் 92 இடங்களைக் கைப்பற்றி மாஸ் வெற்றி பெற்றிருக்கிறது ஆம் ஆத்மி. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி 18 இடங்களும், பாஜக 2 இடங்களும் மட்டுமே வென்றது. மொத்த கட்சிகளையும் தன்னுடைய துடைப்பத்தால் துடைத்தெறிந்து மாஸாக ஆட்சி அமைக்கிறது ஆம் ஆத்மி. வெற்றி பெற்றதும், பகத்சிங்கின் சொந்த ஊரில் தான் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடக்கும் என பஞ்சாப் முதல்வராக பதவியேற்கப்போகும் பகவந்த் மான் சொல்ல, என்னப்பா இது சென்டிமெண்ட் சீன் இல்லையே என எதிர்பார்த்த நேரத்தில், தேவைக்கும் அதிகமாய் சென்டிமெண்டை பஞ்சாப் மக்களுக்குக் கொடுத்திருக்கிறது ஆம் ஆத்மி.

தேசிய கட்சி
சொந்த ஊரில் ஜெயிச்சாச்சு, அடுத்து 'பேன் இந்தியா' ஹிட் கொடுக்க வேண்டாமா.. அப்படித்தான் சென்றுகொண்டிருக்கிறது ஆம் ஆத்மி. சொந்த மாநிலமான டெல்லியில் யாராலும் அசைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நங்கூரம் இட்டிருக்கிறது ஆம் ஆத்மி. அதுபோலவே அண்டை மாநிலத்திலும் ஆட்சி அமைத்தாகிவிட்டது. இந்த தேர்தலில் கோவாவில் தனித்துப் போட்டியிட்டு 2 இடங்களைக் கைப்பற்றிவிட்டது. உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் ஆம் ஆத்மி எந்த வெற்றியும் பெறவில்லை என்றாலும், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளைப் பிரித்திருக்கிறது. ஆம் ஆத்மி இப்போது காங்கிரஸ் கட்சிக்கு சமமான ஒரு தேசிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

அடுத்து என்ன?
அடுத்து என்ன.. ஹாலிவுட்டானு கேட்கும் அளவுக்கு ராக்கெட் வேகத்தில் வளர்ந்திருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. பிரதமர் கனவில் இருக்கிறார் கெஜ்ரிவால் என்று சொல்கிறார்கள். அதே கனவோடு இருக்கும் மம்தா தீதியின் சொந்த மாநிலத்தில் சண்டை செய்ய இறங்கிவிட்டார். 2023 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் நடைபெற உள்ள பஞ்சாயத்துத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிட முடிவு செயதுள்ளது.

நிரூபிக்க வேண்டிய தருணம்
இந்த ஆண்டு குஜராத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலை குறிவைத்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. 'இனி எத்தனை தலை உருளபோகுதோ..' என்ற வடிவேலு பட வசனம் தான் நினைவுக்கு வருகிறது. குஜராத்தில் வலுவாக இருக்கும் பாஜகவை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. பாஜகவின் பி டீம் என்ற பெயரும் ஆம் ஆத்மிக்கு இருக்கிறது. அதைத்துடைத்தெறிய குஜராத் தேர்தலில் குறைந்தபட்ட வெற்றியையாவது பெற்றும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ஆம் ஆத்மி. இவர்கள் மீது புகார்கள் இல்லாமல் இல்லை, நிர்வாக சீர்திருத்தம் மட்டுமே போதும் என்ற ஒற்றை கொள்கையோடு இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு இல்லாமல் இல்லை, ஆனால் இவர்களின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாதபடி மக்கள் இவர்களை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஆம் ஆத்மி.. 'ஒரு பக்கா கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர்' படம்.