சுகாதார கட்டமைப்புகளுக்காக தமிழகத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ3,000 கோடி நிதி- பிரதமர் மோடியின் முழு உரை!
டெல்லி: சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு தமிழகத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ3,000 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் புதிய வளாகம் ஆகியவற்றை வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: வணக்கம். தை பிறந்தால்-வழி பிறக்கும். பொங்கல் வாழ்த்துக்கள். 11 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய கட்டிடம் திறப்பு மூலம், சமுதாயத்தின் ஆரோக்கியம் மேம்படும். அதேவேளையில் கலாச்சாரத்துடனான நமது தொடர்பும் மேலும் வலுவடையும்.
மருத்துவர்கள் பற்றாக்குறை என்பது மிக நீண்டகாலமாக இருந்து வரும் பிரச்சினை. இந்த இடைவெளியை குறைக்க தற்போதைய மத்திய அரசு முன்னுரிமை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. 2014-ல் நாட்டில் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. கடந்த ஏழாண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 596 ஆக உயர்ந்துள்ளது. இது 54% உயர்வாகும். 2014-ல் இந்தியாவில் சுமார் 82 ஆயிரம் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் தான் இருந்தன. கடந்த 7 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை சுமார் சுமார் 1 லட்சத்து 48 ஆயிரம் இடங்களாக அதிகரித்துள்ளது.
உ.பி.: பாஜகவின் மேலும் ஒரு எம்.எல்.ஏ. எஸ்கேப்... அகிலேஷின் கூட்டணி கட்சியில் இணைந்தார்!

என் சாதனையை முறியடித்தேன்
2014-ல் நாட்டில் 7 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. ஆனால், 2014-க்கு பிறகு 22 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மருத்துவக் கல்வித் துறையை மேலும் வெளிப்படையானதாக்க பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருப்பதன் மூலம், அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் ஒரேநாளில் 9 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கிய எனது சாதனையை நானே முறியடித்து இருக்கிறேன்.

சுகாதாரத்துறை சீர்திருத்தங்கள்
முன்னேற்றத்தை விரும்பும் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும், மலை மாவட்டமான நீலகிரியிலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருப்பதன் மூலம் பிராந்திய சமச்சீரற்ற தன்மை களையப்பட்டிருக்கிறது. வாழ்வில் ஒருமுறை ஏற்பட்ட கோவிட் 19 பெருந்தொற்று சுகாதாரத் துறையின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறது. சுகாதார சேவைகளில் முதலீடு செய்வோருக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது. இந்த துறையில் மத்திய அரசு ஏராளமான சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. ஆயுஷ்மான் பாரத்தின் விளைவாக ஏழை மக்களுக்கு உயர்தர சிகிச்சை குறைவான செலவில் கிடைக்கிறது. செயற்கை மூட்டு மற்றும் ஸ்டென்ட் போன்றவற்றின் விலையும் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது. ஒரு ரூபாய் விலைக்கு நாப்கின்கள் வழங்கப்படுவதன் மூலம் பெண்களின் ஆரோக்கிய வாழ்க்கை முறை மேம்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு ரூ3,000 கோடி
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் கட்டமைப்பு இயக்கம், சுகாதார கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் இடைவெளியை அகற்றி, மாவட்ட அளவில் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வகை செய்துள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டுக்கு 3,000 கோடி ரூபாய்க்கு மேல் உதவி வழங்கப்படவுள்ளது. இது, நகர்ப்புற சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள், மாவட்ட பொது சுகாதார பரிசோதனைக் கூடங்கள் மற்றும் மாநிலம் முழுவதும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளை தொடங்க உதவும். வரும் ஆண்டுகளில், "தரமான குறைந்த செலவிலான, சிகிச்சைக்கு உரிய இடமாக இந்தியாவை மாற்றுவதே எனது கனவு. மருத்துவ சுற்றுலாவுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்தியாவில் உள்ளன. இது நமது மருத்துவர்களின் திறன் அடிப்படையில் ஏற்பட்டதாகும். தொலை மருத்துவ சேவைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.

புதிய கல்வி கொள்கையில் தாய்மொழி
தமிழ்மொழி மற்றும் கலாச்சாரம் என்னை எப்போதும் ஈர்க்கும். ஐநா சபையில், உலகின் மிகத் தொன்மை வாய்ந்த மொழியான தமிழ்மொழியில் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது எனது வாழ்நாளில் ஏற்பட்ட மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாகும். பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆய்வுகளுக்காக 'சுப்ரமணிய பாரதி இருக்கை' ஏற்படுத்திய கவுரவமும் எமது அரசுக்கு கிடைத்திருக்கிறது. எனது நாடாளுமன்ற தொகுதியில் அமைந்துள்ள இந்த இருக்கை, தமிழ் மொழி மீது பேரார்வத்தை ஏற்படுத்தும். புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ல் இந்திய மொழிகள் மற்றும் இந்திய அறிவாற்றல் முறை ஊக்குவிக்கப்பட்டிருப்பது. இதன் மூலம் தமிழ்மொழியை தற்போது தொடக்க கல்வி மற்றும் நடுநிலைக் கல்வி அளவிலான பள்ளிக் கல்வியிலேயே செம்மொழியாக கற்க முடியும். பல்வேறு இந்திய மொழிகளில் 100 வார்த்தைகளை ஒளி-ஒலி வடிவில் சிறப்பாக கற்றறிந்த பள்ளிக்கூட மாணவர்களின் அமைப்பான பாஷா-சங்கத்தில் ஒரு மொழியாக தமிழும் உள்ளது. தமிழ்மொழியின் பெருமளவு மின்னணு வடிவங்கள் பாரத்வாணி திட்டத்தின் கீழ் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூட அளவில் தாய்மொழி மற்றும் உள்ளூர் மொழியில் கல்வி கற்பதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.

ஒரே பாரதம், உன்னத பாரதம்
பொறியியல் போன்ற தொழில்நுட்பப் படிப்புகளையும் இந்திய மொழிகளில் மாணவர்களுக்கு வழங்க எங்களது அரசு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. "ஒரே பாரதம், உன்னத பாரதம்" என்பது வேற்றுமையில் ஒற்றுமை உணர்வை விரிவுபடுத்தவும், நமது மக்களை நெருக்கமாக்கவும் விரும்புகிறது. ஹரித்வாரில் உள்ள ஒரு இளம் சிறுவன் திருவள்ளுவர் சிலையைக் கண்டு அவரது மேன்மையை அறிந்து கொள்ளும் போது, அந்த இளம் மனதில் "ஒரே பாரதம், உன்னத பாரதம்" என்ற விதை விழும்". அனைவரும் முன்னெச்சரிக்கையை மேற்கொள்ள வேண்டும். கொவிட் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பேண வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.