தயாராகும் சாவர்க்கரின் வரலாற்று திரைப்படம்... மீசையுடன் சாவர்க்கர் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
டெல்லி: சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான "ஸ்வதந்ரா வீர் சாவர்க்கர்" இன் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்து மகா சபை நிறுவனரும், இந்துத்துவ தலைவருமான வீர சாவர்க்கர் வாழ்க்கை வரலாற்று படத்தை இந்தியில் மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கி வருகிறார்.
இலங்கையில் அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 3 மடங்கு கட்டணத்தை உயர்த்த திட்டம்
இதில் பாலிவுட் நடிகர் ரந்தீப் ஹூடா சாவர்க்கர் கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

ஃபர்ஸ்ட் லுக்
சாவர்க்கரின் பிறந்தநாளான இன்று இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இதனை நடிகர் ரந்தீப் ஹூடா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதில் ரந்தீப் ஹூடா வட்டமாக கண்ணாடி, தொப்பி, கோர்ட் அணிந்துகொண்டு இருக்கிறார். அந்த போஸ்டரின் மேலே "இந்து என்பது மதம் அல்ல. வரலாறு..." என்ற அர்த்தம் தரும் இந்தி வாசகம் எழுதப்பட்டுள்ளது.

சாவர்க்கருக்கு சல்யூட்
"இந்தியாவின் சுதந்திரம் மற்றும் உணர்வுக்கான போராட்டத்தில் பங்கேற்ற பேசப்படாத நாயகனுக்கு சல்யூட். இவ்வளவு காலமாக மறைக்கப்பட்டு கிடந்த உண்மையான புரட்சியாளரின் சவாலான கதையில் நான் வாழ்ந்திருக்கிறேன் என நம்புகிறேன்." என ட்விட்டரில் ரந்தீப் ஹூடா தெரிவித்துள்ளார். இந்த போஸ்டரில் ரந்தீப் ஹூடா சாவர்க்கரை போன்றே இருப்பதாக பலர் கருத்திட்டு வருகின்றனர்.

யார் இந்த சாவர்க்கர்?
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் பிறந்த சாவர்க்கரை சுதந்திர போராட்ட தியாகி என பாஜகவினர் மற்றும் இந்துத்துவ அமைப்புகள் தெரிவித்து வருகின்றன. ஆனால், இந்த கூற்றை காங்கிரஸ், இடதுசாரிகள், திராவிட கட்சிகள் மறுத்துள்ளன. அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட சாவர்க்கர் வெள்ளையருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவர் என பல ஆண்டுகளாக வரலாற்று ஆதாரங்களுடன் அவர்கள் தெரிவித்தும் வருகின்றனர்.

மோடி, ராஜ்நாத் சிங்
இதனை ஆமோதிக்கும் வகையில் கடந்த ஆண்டு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், மகாத்மா காந்தியின் அறுவுறுத்தலின்படியே சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார் எனக்கூறியது அப்போது சர்ச்சைக்கு வித்திட்டது. இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் "அன்னை பாரதியின் கடின உழைப்பாளியான மகன் வீர சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதைக்குரிய அஞ்சலியை செலுத்துகிறேன்." என குறிப்பிட்டு இருக்கிறார்.