அருணாச்சல எல்லையில் சீனா கட்டிய 2ஆவது கிராமம்.. இந்திய பகுதியில் உள்ளதா? சாட்டிலைட் படங்களால் பகீர்
டெல்லி: சீன எல்லையில் அருணாச்சலப் பிரதேசத்தில் குறைந்தபட்சம் 60 கட்டிடங்களைக் கொண்ட இரண்டாவது பகுதி அல்லது கிராமத்தைச் சீனா கட்டியுள்ளதை புதிய சாட்டிலைட் படங்கள் காட்டுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இரண்டு தரப்பும் அதிகளவிலான வீரர்களை எல்லையில் குவித்து வருகின்றன.
'இதுதான் இந்தியா'.. முஸ்லிம்கள் தொழுகை செய்வதற்காக 5 குருத்வாராக்களை வழங்கிய சீக்கியர்கள்.. செம!
குறிப்பாக, கடந்த ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, காஷ்மீர் மட்டுமின்றி அருணாச்சல பிரதேசத்திலும் இரு தரப்புக்கும் இடைய அமைதியற்ற சூழல் உருவாகியுள்ளது.

பென்டகன் அறிக்கை
இந்தியாவும் சரி சீனாவும் சரி எல்லையில் அதிகளவில் உள்கட்டமைப்பில் முதலீடு செய்து வருகிறது. அருணாச்சல பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய இடத்தில் சீனா புதிய கிராமம் ஒன்றையே கட்டியுள்ளதாகக் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் பென்டகன் தெரிவித்திருந்தது. 100 குடும்பங்கள் வாழக் கூடிய வகையில் சீனா அங்குக் கிராமத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் அது கிராமம் இல்லை என்றும் ராணுவ முகாம் என்றும் கூட தகவல்கள் வெளியானது.

புதிய கட்டுமானம்
இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா மற்றொரு கிராமத்தைக் கட்டியுள்ளதாக என்டிடிவி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது முன்பு அருணாச்சல பிரதேசத்தில் சீனாவால் கட்டப்பட்ட சர்ச்சைக்குரிய கிராமத்திற்குக் கிழக்கே 93 கி.மீ தொலைவில் உள்ளது, 2019இல் எடுக்கப்பட்ட சாட்டிலைட் படங்களில் இந்த கட்டுமானம் இல்லை. இருப்பினும், தற்போது இந்த மிகப் பெரிய கட்டுமானம் சாட்டிலைட் படங்களில் தெளிவாகப் பதிவாகியுள்ளதாக என்டிடிவி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய அரசு விளக்கம்
முன்னதாக எல்லைப் பகுதியில் சீனா மேற்கொண்டு வரும் கட்டுமானங்கள் குறித்து மத்திய அரசு கூறுகையில், "'சீனா கடந்த பல ஆண்டுகளாகவே எல்லைப் பகுதிகளில், பல ஆண்டுகளாகச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதிகளிலும் கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை இந்தியா ஏற்கவில்லை" என்று கூறியிருந்தது.

எங்கே அமைந்துள்ளது
இந்த இரண்டாவது கட்டுமானம் லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல் (எல்ஏசி) மற்றும் சர்வதேச எல்லைக்கு இடையே உள்ள பகுதியில் சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த பகுதியை இந்தியா தனது சொந்தப் பகுதி என்றே கூறி வருகிறது. இந்த கட்டுமானத்தில் சீன மக்களோ அல்லது ராணுவத்தினரோ இருக்கிறார்களா இல்லையா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை.

ராணுவம் சொல்வது என்ன
இது தொடர்பாக இந்தியா ராணுவம் என்டிடிவி நிறுவனத்திடம் கூறுகையில், "'நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த கட்டுமானம் சீனப் பிரதேசத்தில் உள்ள LACயின் வடக்கே அமைந்துள்ளது'' என்று தெரிவித்தது. இருப்பினும், இந்தக் கட்டுமானம் லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல் (எல்ஏசி) மற்றும் சர்வதேச எல்லைக்கு இடையே உள்ள பகுதியில் அமைந்துள்ளதை இந்திய ராணுவம் மறுக்கவில்லை. இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பகுதியை இந்திய சீனப் போருக்குப் பிறகு சீனா ஆக்கிரமித்தது.

பாஜக எம்பி
முன்னதாக கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் பேசிய அருணாச்சல பிரதேச பா.ஜ எம்பி தபீர் காவ், "இந்தியப் பகுதியை (அருணாச்சலப் பிரதேசத்தில்) சீனா எந்த அளவுக்குக் கைப்பற்றியது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்று நாட்டில் உள்ள ஊடக நிறுவனங்களிடம் நான் கூற விரும்புகிறேன்" என்றார். மேலும், 2017-ல் டோக்லாமில் இந்தியா-சீனா இடையே பல மாதங்கள் நீடித்த மோதலை குறிப்பிட்ட அவர், டோக்லாம் மோதலை போல மற்றொன்று நடந்தால் அது நிச்சயம் அருணாச்சலப் பிரதேசத்தில் தான் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

உறுதி செய்யும் வல்லுநர்கள்
இந்திய அரசின் ஆன்லைன் மேப் சேவையான பாரத்மேப்ஸில் இந்த புதிய கட்டுமானம் இந்தியாவிற்குள் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. மேலும், பல வல்லுநர்களும் இந்த கட்டுமானம் இந்தியாவின் சர்வதேச எல்லைக்குள் 7 கிமீ தூரத்தில் இருப்பதை உறுதி செய்கின்றனர். இது இந்தியாவின் எல்லைக்குள் இருந்தாலும் புவியியல் ரீதியாகச் சீனாவுக்கு மிக அருகில் உள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங்-இன் விமானம் தரையிறங்கும் இடத்தில் இருந்து வெறும் 33 கிமீ தொலையில் இந்த கட்டுமானம் அமைந்துள்ளது.

சீன கொடியுடன் கட்டுமானங்கள்
அருணாச்சலத்தின் ஷி-யோமி மாவட்டத்தின் இந்தப் படங்களில் பல கட்டிடங்கள் உள்ளது தெளிவாகத் தெரிகிறது. மேலும் கட்டிடங்களின் மாடிப் பகுதிகள் சீனாவின் கொடியைப் போல் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. இது சாட்டிலைட் மூலம் பார்த்தால் கூட தெளிவாகத் தெரியும் வகையில் உள்ளது. இதன் மூலம் இந்த பகுதி தங்களுக்குச் சொந்தமானது என்பதைச் சீனா சொல்ல விரும்புகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்தியாவின் இமயமலை எல்லைப் பகுதிகளைச் சீனா ஆக்கிரமிப்பதாக இந்திய வல்லுநர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள யாரும் சீன மொழி பேசாத போதிலும், இதுபோன்ற நடவடிக்கைகளால் சீனா எல்லையை ஆக்கிரமிப்பதாக அவர்கள் சாடியுள்ளனர்.