பெகாசஸ் விவகாரம்.. பொறுப்பை மோடி தட்டிகழிக்க கூடாது.. நாடாளுமன்ற நிலைக்குழு விசாரிக்கணும் - சசிதரூர்
டெல்லி: பெகாசஸ் விவகாரத்தை நாடாளுமன்ற நிலைக்குழு விசாரிக்கும் என்று நம்புவதாக சசிதரூர் எம்.பி கூறியுள்ளார். பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம்தான் இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பேசும் பொருளாக இருந்து வருகிறது.
பெகாசஸ் ஸ்பைவேர் என்ற மென்பொருளை பயன்படுத்தி இந்தியாவில் ராகுல்காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் செல்போன் உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்க அழைத்து 3 மாத கர்ப்பிணி எரித்து கொலை.. காதல் கணவர் கைது
தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரத்தை கையில் எடுத்து எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் தொடர்ந்து முடக்கி வருகிறது.

பெகாசஸ் விவகாரம்
பெகாசஸ் விவகாரத்தில் நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு விசாரணை நடத்துவதில் என்ன தயக்கம்? என்ன பயம் இருக்கிறது? என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேரடியாக குற்றம்சாட்டினார். இது பாஜக தேசத்துக்கு செய்யும் துரோகம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் குற்றம் சாட்டி இருந்தார்.

நீதிமன்ற விசாரணை வேண்டும்
பெகாசஸ் விவகாரத்தில் நீதிமன்ற விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி மூத்த பத்திரிகையாளர் என்.ராம் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் தீவிரமான விஷயம் என்று கூறிய உச்ச நீதிமன்றம்,
பெகாசஸ் விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட யாரேனும் புகார்கள் கூறி இருக்கிறீர்களா? என்று ஆதாரம் கேட்டது.

நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம்
பெகாசஸ் விவாகரம் தொடர்பாக தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த மாத இறுதியில் நிலைக்குழுவின் தலைவர் சசி தரூர் எம்.பி. தலைமையில்ஆலோசனை நடத்த முடிவு செய்து இருந்தது. இந்த கூட்டத்தில் பாஜகவை சேர்ந்த முக்கிய எம்.பி.க்கள் பங்கேற்காமல் இருந்தது மட்டுமில்லாமல் தகவல் தொழில்நுட்பத்துறையின் முக்கியமான அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. பாஜக கொடுத்த அழுத்தம் காரணமாகவே அவர்கள் கலந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டபப்ட்டது.

பிரதமர் மோடி அழுத்தம்
இந்த நிலையில் பிரதமர் மோடி கொடுத்த அழுத்தம் காரணமாகவே தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் சசி தரூர் எம்.பி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- நாடாளுமன்றத்தை முடக்குவது மூலம் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தையும், தேசத்தையும் அவமதித்து விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறி இருக்கிறார்.

இதுதான் உண்மையான அவமதிப்பு
நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினை குறித்து விவாதம் செய்ய மறுப்பதும், விசாரணை செய்யும் மற்றும் பொறுப்பை தட்டிகழிப்பதுதான் நாடாளுமன்றத்துக்கு செய்யும் உண்மையான அவமதிப்பாகும். பெகாசஸ் குற்றச்சாட்டுகள் விவாதிக்கப்படுவதை விரும்பாததால் ஜூலை 28 ஆம் தேதி நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தை பாஜக உறுப்பினர்கள் சீர்குலைத்தனர். கூட்டத்தை தவிர்ப்பதற்காக கடைசி நேரத்தில் சாக்குப்போக்கு சொன்ன மூன்று அதிகாரிகளின் நடவடிக்கைகள் யாரோ சொல்லி செயல்படுவதுபோல் இருந்தது.

நம்புகிறேன்
குடிமக்களின் தனியுரிமை டேட்டா, பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பு, தலைப்புகள் பற்றிய விவாதங்களை தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு நடத்தியுள்ளது. பாஜகவின் அனுராக் தாக்கூர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. எனவே பெகாசஸ் பிரச்சினை தெளிவாக தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் கீழ் வருகிறது. எனவே பெகாசஸ் விவகாரத்தை நாடாளுமன்ற நிலைக்குழு விசாரிக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு சசி தரூர் எம்.பி கூறியுள்ளார்.