இலங்கையை முன்வைத்து இந்தியாவுடன் இடைவிடாது மல்லுக்கட்டும் சீனா.... ராஜபக்சே சகோதரர்கள் 'டபுள் கேம்'
டெல்லி: இலங்கையை முன்வைத்து இந்தியாவுடன் சீனா மல்லுக்கட்டுவது தொடர் கதையாகி வருகிறது. இலங்கையில் அதிகாரத்தில் ராஜபக்சே சகோதரர்களின் இரட்டைவேடத்தை சீனா தமக்கு சாதகமாக இலகுவாக பயன்படுத்தி வருகிறது.
தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கையில் இந்தியா மிக நீண்டகாலம் செல்வாக்கை தக்க வைத்து கொண்டிருந்தது. ஆனால் காலப் போக்கில் இந்த நிலைப்பாட்டில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டன.

இந்தியாவுக்கு பின்னடைவு
இதனை பயன்படுத்தி இலங்கையில் சீனாவும் காலூன்றியது. இலங்கையில் சிங்களர் பிரதேசத்தில் சீனாவும் தமிழர் தாயக நிலப்பரப்பில் இந்தியாவும் நிலை கொள்ளும் நிலை உருவானது. இப்போது அடுத்தடுத்து இந்தியாவுக்கு இலங்கையில் பின்னடைவை தரும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையம்
இலங்கை கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கொள்கலன் முனையம் அமைக்க இலங்கை-இந்தியா- ஜப்பான் மூன்று நாடுகளும் கையெழுத்திட்டிருந்தன. இந்த கொள்கலன் முனையம் இந்தியா வசம் வந்துவிட்டால், கொழும்பு துறைமுகத்தில், அம்பந்தோட்டா துறைமுகத்தில் சீனாவின் இருப்பு கேள்விக்குறியாகும். இதனால் இலங்கையில் தொழிற்சங்கங்களை தூண்டிவிட்டு எதிர்ப்பு போராட்டங்களை சீனா நடத்துகிறது.

ராஜபக்சேக்களின் இரட்டை வேடம்
இன்னொரு பக்கம் அதிகாரத்தில் இருக்கும் ராஜபக்சே சகோதரர்களின் இரட்டை வேடம்.. இதனால் கிழக்கு கொள்கலம் முனையம் இந்தியாவுக்கு கிடைப்பதில் முட்டுக்கட்டை தொடருகிறது. ஆனால் ஊடக பேட்டிகளில் இந்தியாவை நட்புசக்தி என பேசி வருகின்றனர் ராஜபக்சே சகோதரர்கள்.

தமிழகம் அருகே காற்றாலை
இதேபோல் பாக்ஜலசந்தியில் பிரமாண்ட காற்றாலை திட்டத்தை சீனாவுக்கு கொடுத்திருக்கிறது இலங்கை. இந்தியாவின் கேந்திர பாதுகாப்புக்கு மிக மிக அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய திட்டம் இது. ஏனெனில் தமிழகத்தை ஒட்டிய, தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை கொண்ட பகுதியில் இந்த காற்றாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கிறது.

இலங்கை விலகுகிறது?
கொரோனா பாதிப்புக்கு இந்தியாவிடம் இருந்து தடுப்பு மருந்துகளை இலங்கை வேண்டுகிறது. இன்னொரு பக்கம் கொரோனா கால நெருக்கடிகளை சமாளிக்க சீனாவின் நிதி உதவியையும் இலங்கை பெற்றுக் கொள்கிறது. ஈழத் தமிழர் இனப்படுகொலை உள்ளிட்ட விவகாரங்களில் பாகிஸ்தான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளுடன் கை கோர்த்துக் கொள்கிறது இலங்கை. சீனா, இலங்கை இணைந்து இந்தியாவின் திட்டங்களுக்கு அடுத்தடுத்து முட்டுக்கட்டை போட்டு நிற்பது என்பது இலங்கையின் வெளியுறவுக் கொள்கை இந்தியாவிடம் இருந்து வெகுதொலைவு விலகிப் போய்விட்டதையே காட்டுகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.