மம்தா பற்ற வைத்த நெருப்பு.. உ.பி, உத்தரகண்ட் என தொடரும் சிக்கல்.. 5 மாநில தேர்தல் பாஜக திட்டம் என்ன
டெல்லி: 2022 ஐந்து மாநில தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் என அடுத்தடுத்து பாஜக சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
அடுத்தாண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் பஞ்சாப் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜக தான் ஆட்சியில் உள்ளது. பாஜக தனது இமேஜை தக்க வைக்க இந்த தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது..
குழந்தை திருமணம், பாலியல் குற்றங்கள்.. தைரியமா புகார் கொடுங்கள்.. பெண் போலீஸார் விழிப்புணர்வு

5 மாநில தேர்தல்
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பாஜகவால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. தமிழ்நாட்டில் 20 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் பாஜக வென்றது. கேரளாவில் கணிசமான அளவில் இடங்களைப் பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கினாலும், பாஜகவால் ஒரு இடத்திலும் வெல்ல முடியவில்லை.

மேற்கு வங்கம்
இதில் முக்கியமானது மேற்கு வங்கம். 2011 முதல் ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்கியது. பிரதமர் மோடி தொடங்கி உள் துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங் எனப் பலரும் வங்கத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். இருப்பினும், அங்கு 100 இடங்களைக் கூட பாஜகவால் பெற முடியவில்லை. இது அக்கட்சிக்கு ஏற்பட்ட மிகப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

பிரசாந்த் கிஷோர்
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பெற்ற வெற்றி முக்கியமானது என்றும் பாஜக தோற்கடிக்கவே முடியாத கட்சி இல்லை என்பதையே இது காட்டுவதாகப் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார். தேர்தல் தோல்வியுடன் நாட்டில் ஏற்பட்ட கொரோனா 2ஆம் அலையும் பாஜகவின் இமேஜை காலி செய்துவிட்டது.

Array
இது அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேர்தல்களில் பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடாது என்பதில் பாஜக கவனமாக உள்ளது. அடுத்தாண்டு தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் இரண்டும் முக்கியமானது. இதில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் உள்ளது. ஆனால், இரு மாநிலங்களிலும் சமீப காலமாக நடக்கும் சம்பவங்கள் பாஜகவுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை,

உத்தரப் பிரதேசம்
குறிப்பாக உத்தரப் பிரதேசம் என்பது பிரதமர் மோடியின் இமாஜ் சார்ந்த ஒன்று. கடந்த 2019 மக்களவை தேர்தலில் உபியில் மட்டும் பாஜக 62 இடங்களை கைப்பற்றியது. அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலை 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னோட்டமாக பாஜக பார்க்கிறது. கொரோனா 2ஆம் அலையை கையாண்ட விதத்தில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது அம்மாநில மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மோடியின் தளபதி
இதனால், யோகிக்கு செக் வைக்கும் விதமாக மோடியின் நம்பிக்கைக்குரிய தளபதியாகக் கருதப்படும் ஏகே சர்மா அங்குக் களமிறக்கப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச பாஜகவின் துணைத் தலைவராக ஏகே சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இது உபி அரசியலில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்து்ம் என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும். அதேநேரம் உபியில் பிரமாணர்களின் வாக்குகளும் அதிகம் என்பதால் ஏகே சர்மா வருகை அந்த சமுதாயத்தினரின் வாக்கு வங்கியை வலுப்படுத்தும்.

உத்தரகண்ட் மாநிலம்
அடுத்து உத்தரகண்ட் மாநிலத்திலும் அம்மாநில முதல்வர் தீரத் சிங் ராவத் ராஜினாமா செய்துள்ளார். இவர் கடந்த மார்ச் 10ஆம் தேதி தான் முதல்வராகப் பதவியேற்றார். முன்பு முதல்வராக இருந்த திருவேந்திர சிங் ராவத் மீது அதிருப்தி அதிகமாக இருந்ததால், தேர்தலைக் கருத்தில் கொண்டு பாஜக புதிய முதல்வரை நியமித்தது. ஆனால், கொரோனா 2ஆம் அலை, கும்பமேளா எனத் தொடர்ந்து நெருக்கடி அதிகரித்ததால் அவரும் ராஜினாமா செய்துள்ளார்.

Array
அதேபோல தேர்தல் நடைபெறும் கோவா, மணிப்பூர் மாநிலங்களிலும் பாஜக தான் ஆளும்கட்சி என்றாலும்கூட காங்கிரஸ் தான் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. எனவே, அந்த இரு மாநிலங்களிலும் இரண்டு கட்சிகளும் இடையே கடும் போட்டி இருக்கும். பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி குழப்பம் இருந்தாலும், அங்கு பாஜக முக்கிய போட்டியாக இல்லை.

பாஜக
மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் தொடங்கிய பாஜகவின் சரிவு அடுத்தாண்டும் தொடர்ந்தால் பெரும் சிக்கலையே ஏற்படுத்தும். ஏனென்றால், அடுத்தாண்டு தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பஞ்சாப் தவிர அனைத்திலும் ஆளும்கட்சியாக இருப்பது பாஜக தான். எனவே, கட்சியில் இருக்கும் பிரச்சினைகளை விரைவில் சரி செய்யாவிட்டால், அது நிச்சயம் அக்கட்சிக்கு இழப்பையே ஏற்படுத்தும்.