சுனந்தா புஷ்கர் மரணம்.. சசி தரூரை வழக்கில் இருந்து விடுவித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தருரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் இருந்து சசிதரூர் விடுவிக்கப்பட்டுள்ளார். டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் சசி தரூரை வழக்கில் இருந்து விடுவித்து உள்ளது.
காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தருரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரின் மரணம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
'தமிழக அரசை நம்புகிறோம்.. ஆன்லைன் ரம்மி தடைக்கு 6 மாதங்களில் புதிய சட்டம்..' ஹைகோர்ட் கருத்து
சுனந்தாவின் மரணம் இயற்கை மரணம் அல்ல என்றும், விஷத்தால் நிகழ்ந்தது என்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய டெல்லி போலீஸார், சசி தரூர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

குற்றவாளி
சசி தரூரை முக்கிய குற்றவாளியாக கருதிய டெல்லி போலீசார் இந்த வழக்கில் அவரின் பெயரையும் இணைத்து 498-A (கணவர் அல்லது கணவரின் உறவினர் கொடுமை) 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் சசி தரூருக்கு ஜாமீன் வழங்கிய நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த வழக்கில் தீவிர விசாரணை நடந்து வந்தது.

வழக்கறிஞர்
டெல்லி போலீஸ் மற்றும் அரசு சார்பாக வழக்கறிஞர் அதுல் குமார் ஸ்ரீவஸ்தவா இந்த வழக்கில் ஆஜராகி வாதிட்டு வந்தார். சசி தரூர் சார்பாக இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் பஹ்வா ஆஜராகி வாதிட்டு வந்தார். இதில் அரசு தரப்பில் வாதம் செய்த அதுல் குமார், சுனந்தா மரணம் மர்மமானது. இதில் கூடுதல் விசாரணைகளை நடத்த வேண்டும். இது தொடர்பான போஸ்ட்மார்ட்டம் அறிக்கையும் மரணம் இயற்கையானது இல்லை என்பதை உறுதி செய்துள்ளது.

விஷம்
சுனந்தா உடலில் விஷம் இருந்தது என்று வாதம் வைத்தார். சசி தரூர் தரப்பு வழக்கறிஞர் விகாஸ் பஹ்வா, இதை தரூருக்கு எதிராக ஆதாரங்கள் எதுவும் சமர்பிக்கப்படடவில்லை. சசி தரூரை இதில் முதல் குற்றவாளியாக சேர்க்கும் அளவிற்கு அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப் படவில்லை என்பதால் அவரை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று வாதம் வைத்தார்.

கோரிக்கை
இதையடுத்து இந்த வழக்கில் கூடுதல் விவரங்களை, ஆதாரங்களை தாக்கல் செய்ய வாய்ப்பு தர வேண்டும் என்றும் முந்தைய கோர்ட் தீர்ப்பு உதாரணங்களை தாக்கல் செய்ய அவகாசம் தர வேண்டும் என்று கடந்த விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞர் அதுல் குமார் கோரிக்கை வைத்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயால் இன்று வழக்கில் இருந்து சசி தரூரை விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.

வரவேற்பு
அதே சமயம் டெல்லி போலீசார் இந்த வழக்கில் கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். நீதிபதியின் தீர்ப்பை சசி தரூர் வரவேற்று உள்ளார். இந்த தீர்ப்பு எனக்கு கிடைத்த நீதி, நான் நீதிமன்றத்திற்கு நன்றிக்கடன் பட்டு இருக்கிறேன். நான் ஏழு வருடங்களாக அனுபவித்த கொடுமைகளுக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன், என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.