சி.வி சண்முகம் "மகிழ்ச்சி"..அதிமுக பொதுக்குழு ஜோராக நடக்கும்.. இபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகம்
டெல்லி: சென்னை டிவிசன் பெஞ்ச் வழங்கிய தீர்ப்புக்கு தடை கேட்டு நாங்கள் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி வரும் 11ஆம் தேதியன்று பொதுக்குழுவை நீங்கள் நடத்திக்கொள்ளலாம் அதற்குத் தடையில்லை என்று கூறியுள்ளனர். பொதுக்குழுவை சிறப்பாக நடத்துவோம் என்று முன்னாள் அமைச்சரும் இபிஎஸ் ஆதரவாளருமான சி.வி சண்முகம் கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூடியது. அந்த பொதுக்குழுவிற்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கில் பொதுக்குழுவை நடத்தலாம் ஆனால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு எந்த தீர்மானத்தின் மீதும் முடிவு எடுக்க கூடாது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஓபிஎஸ்ஸுக்கு இருந்த அந்த வழி காலி.. பெரிதும் நம்பிய பன்னீர்.. மொத்தமா முடிச்சுவிட்ட சுப்ரீம் கோர்ட்!
மேற்கண்ட உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடந்த 28ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாதித்த நீதிபதிகள், நீதிபதிகள் உத்தரவில், 'கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதிமுக பொதுக்குழு நடத்த தடை விதிக்க முடியாது. பொதுக்குழுவை நடத்த நீதிமன்றம் வழி காட்ட முடியாது என்று உத்தரவிட்டனர்.

உத்தரவு நிறுத்திவைப்பு
அதிமுக கட்சி விவகாரங்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினர். ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவை சட்டப்படி நடத்திக் கொள்ளலாம் என உச்சநீதிமன்ற உத்தரவிட்டனர். ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகளின் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வழக்கில் நிவாரணம் தேவைப்பட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி அமர்வில் ஓபிஎஸ் தரப்பு முறையிடலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு தடை
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கும் தடை விதிக்கிறோம். பிரச்சனைகளை பொதுக்குழுவில் பேசிக்கொள்ளுங்கள். அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் நட்பு ரீதியில் தீர்வு காண வேண்டும் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளனர். 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இன்பதுரை பேட்டி
இந்த தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரும் வழக்கறிஞருமான இன்பதுரை ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழுவை சட்டப்படி நடத்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக வழக்கறிஞர் இன்பதுரை கூறியுள்ளார்.

இடைக்கால தடை
சென்னை டிவிசன் பெஞ்ச் வழங்கிய தீர்ப்புக்கு தடை கேட்டு நாங்கள் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி வரும் 11ஆம் தேதியன்று பொதுக்குழுவை நீங்கள் நடத்திக்கொள்ளலாம் அதற்குத் தடையில்லை என்று கூறியுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிசன் பெஞ்ச் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடையை வழங்கியுள்ளனர். அதோடு தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கும் நீதிபதிகள் தடை வழங்கியுள்ளனர். தொடர்ந்து பேசிய இன்பதுரை உள்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் எப்படி தலையிட முடியும் என்று நீதிபதிகள் பிரதான கேள்வியை எழுப்பியுள்ளனர் என்றார்.

சி.வி. சண்முகம் உற்சாகம்
பொதுக்குழுவிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், ஒரு கட்சியின் உள் கட்சி விவகாரத்தில் எப்படி தலையிட முடியும் என்று கேட்டுள்ளனர். ஒரு கட்சியின் கூட்டத்தில் என்ன பேசலாம் என்ன பேசக்கூடாது என்று நீதிமன்றம் எப்படி தலையிட முடியும் என்றும் தெரிவித்துள்ளனர் என்றார்.

உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது தவறு. அதன் மீது போடப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அதை விட தவறு என கூறிய நீதிபதிகள் அந்த தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளனர். வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு சட்டத்திற்கு உட்பட்டு முறையிடலாம் எனவும் ஏதாவது சிக்கல் என்றால் தனி நீதிபதியிடம் முறையிடலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் யூகத்தில் அடிப்படையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி தள்ளி வைத்துள்ளது.

பொதுக்குழு சிறப்பாக நடக்கும்
பொதுக்குழு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அதிமுக பொதுக்குழு சிறப்பாக நடைபெறும் என்றும் சி.வி. சண்முகம் கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழுவிற்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றதே கூறிவிட்டதால் இபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதே நேரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாகவும் ஹைகோர்ட் உத்தரவை ஏற்றுக்கொள்வோம் என்றும் ஓ. பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.