கொரோனா இழப்பீடு பணம் தருவதில் மெத்தனம்.. மாநிலங்களை கண்டித்த உச்சநீதிமன்றம்.. தமிழக அரசு பதில்!
டெல்லி: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதில் மாநில அரசுகள் தாமதம் செய்து வருவதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு உச்சநீதிமன்றம் உத்தரவின்படி இழப்பீடு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி கவுரவ் பன்சால் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எவ்வளவு ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வரையறுக்க போவதில்லை என்றும் அதை செய்வது மத்திய அரசின் கடமை, எனவே, குறைந்தபட்ச இழப்பீடு தொகையையாவது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்க அரசு முன்வர வேண்டும் என தெரிவித்தது

இதனையடுத்து இழப்பீடாக 50 ஆயிரம் ரூபாய் வழங்க மத்திய அரசு முன் வந்தது. அதேபோல மாநில அரசுகளும் இழப்பீடு வழங்கவும் அறிவுறுத்தி உத்தரவிட்டது. இந்திலையில் கொரோனாவால் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அதில், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடாக 182 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், இழப்பீடு கோரி மொத்தம் 57147 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் 41,131 விண்ணப்பத்துக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
மேலும், தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 8 ஆயிரத்து 160 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 3294 பேருடைய விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், கோவையில் பெறப்பட்ட 4181 விண்ணப்பங்களில் 3017 நபர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரிடம் இழப்பீடு கோரி பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 57147 என்றும், இதில் வகைப்படுத்தி அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 41131 ஆகும். அதேவேளையில் அரசின் வழிமுறைக்குள் வராத 10138 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள தமிழக அரசு, இறுதி செய்யப்பட்ட 41,131 விண்ணப்பங்களில் 38,114 விண்ணப்பங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் கொரோனா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், எனவே, கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு செயல்படுத்தப்படுவதாகவும் தமிழக அரசு தனது அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 4-ஆம்தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அது போல் விண்ணப்பதாரர்கள் ஜனவரி 19ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்குள்ளான தங்கள் மனுக்களை சரிபார்த்துக் கொள்ள கால அவகாசம் விதிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.