ஆளுநர் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்! அவர் செய்தது சட்டவிரோதம்! உச்சநீதிமன்றம் சுளீர்..!
டெல்லி : முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்துள்ள உச்சநீதிமன்றம், தனது தீர்ப்பில் பல்வேறு முக்கிய கருத்துக்களை கூறி உள்ளது. அதில் குறிப்பாக ஆளுநர் என்பவர் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கிறார் என்பன உள்ளிட்ட பல அதிரடி கருத்துகளை வெளியிட்டுள்ளது.
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தன்னை விடுதலை செய்யக்கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக நடந்த விசாரணையின் போது, தன்னை விடுதலை அளிக்கக்கோரி தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்பும் ஆளுநர் எந்தவிதமான முடிவையும் எடுக்காமல் உள்ளார் எனவும் பேரறிவாளன் தரப்பில் வாதிடப்பட்டது.
பேரறிவாளனை ஜனாதிபதிதான் விடுதலை செய்ய வேண்டுமா? என்ன சொல்றீங்க? மத்திய அரசை விளாசிய உச்ச நீதிமன்றம்!

பேரறிவாளன் வழக்கு
அப்போது ஆளுநரின் நடவடிக்கை குறித்து ஏற்கனவே கேள்வி எழுப்பி இருந்த உச்சநீதிமன்றம், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவை முடிவெடுத்தபின் ஆளுநர் முடிவெடுக்க அவசியமே இல்லை எனவும், பேரறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்க காலதாமதம் ஏன்? இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவது ஏன்? மத்திய அரசு முடிவை அறிவிக்கவில்லை என்றால் நாங்கள் முடிவை அறிவிக்க வேண்டியது இருக்கும். மேலும் இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரம் குறித்து முடிவெடுக்க போகிறோம் எனவும் கூறியது.

பேரறிவாளன் விடுதலை
இதற்கிடையே இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில், அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பேரறிவாளன். மேலும், தனது விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

கடும் விமர்சனம்
குறிப்பாக தங்களது தீர்ப்பில் பல்வேறு முக்கிய கருத்துக்களை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஆளுநருக்குண்டான அதிகாரங்களை மீறி செயல்படுவதாக தமிழக அரசு குற்றம் சாட்டி வரும் நிலையில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ள கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நீதிபதிகள் வழங்கியுள்ள தீர்ப்பில் ஆங்காங்கே தமிழக ஆளுநர்களின் கடந்த கால செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளனர். குறிப்பாக பல இடங்களில் ஆளுநரின் செயல் சட்டவிரோதமானது எனக் கூறியுள்ளனர்.

மாநில அரசின் கட்டுப்பாடு
தங்களது தீர்ப்பின் ஒரு பகுதியில் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், "பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யும் தமிழகஅரசின் பரிந்துரையை 2 1/2 ஆண்டுகள் தாமதம் செய்து குடியரசுத் தலைவருக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைத்தது அரசியலமைப்பிற்கு விரோதமானது ஆளுநர் என்பவர் பணிபுரியும் மாநிலத்திற்கான கட்டுப்பாட்டிற்குள் வரக்கூடியவர் தான்" எனக் கூறியுள்ளனர்.

அதிகாரம் இல்லை
தீர்ப்பின் மற்றொரு பகுதியில் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், " ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட நபர்களை விடுதலை செய்யுமாறு மாநில அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தை மறு பரிசீலனை செய்யுமாறு ஆளுநர் கூறியிருக்கலாம். ஆனால் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் அவரை காலம் தாழ்த்துவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை.

சட்டப்படி தவறு
ஆளுநர் முடிவெடுக்காமல் காலதாமதப்படுத்தியது தவறு. ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது அரசியலமைப்பு சட்டப்படி தவறு. 161வது பிரிவின் ஆளுநர் முடிவெடுக்க தவறினால் உச்சநீதிமன்றமே முடிவெடுக்க வழிவகை செய்யும் சட்டப்பிரிவு 142- ஐ பயன்படுத்தி இந்த தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது." எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.