பணம்..பரிசு கொடுத்து மதமாற்றம்.. அரசியல் சாசனத்துக்கு எதிரானது..உச்சநீதிமன்றம் சாடல்
டெல்லி: பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி மதமாற்றம் செய்வது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏழை மக்களுக்கு செய்யப்படும் உதவியின் நோக்கம் மத மாற்றமாக இருந்தால் அது தவறு. இது மிக தீவிரமான பிரச்சினை என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு குஜராத் சட்டசபையில், "குஜராத் மதச் சுதந்திர சட்டம் 2021" நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி ஒருவரை கட்டாயமாக மதம் மாற்றினாலோ, அதற்கு உதவி செய்தாலோ 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
இந்த சட்டத்தின் 5-வது பிரிவின்படி, ஒருவர் மதம் மாற விரும்பினால் அந்த நபர் மாவட்ட ஆட்சியரிடம் முறைப்படி தகவல் தெரிவிக்க வேண்டும். அவருக்கு மதமாற்ற சடங்குகளை செய்யும் மதத் தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு.. உச்சநீதிமன்றம் அனுமதி

குஜராத் மதச் சுதந்திர சட்டம்
குஜராத் மதச் சுதந்திர சட்டத்தை எதிர்த்து உலமா இ ஹிந்த் என்ற அமைப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், சட்டத்தின் 5-வது பிரிவை அமல்படுத்த கடந்த ஆண்டு ஆகஸ்டில் தடை விதித்தனர். இதை எதிர்த்து குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

மிரட்டி மதமாற்றம்
இதனிடையே பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் அதில், மனிதாபிமான உதவி, பொருளாதார உதவி, பரிசு பொருட்களை வழங்கி ஏமாற்றி மத மாற்றம் நடைபெறுகிறது. மிரட்டி, கட்டாயப்படுத்தியும் மதமாற்றம் நடைபெறுகிறது. இவற்றை தடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இதுதொடர்பாக மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசு களும் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

குஜராத் அரசு மனு
இதன்படி குஜராத் அரசு இரு தினங்களுக்கு முன்பு பதில் மனுவை தாக்கல் செய்தது. அதில் கட்டாய மதமாற்றத்தை தடுக்க நிறைவேற்றப்பட்ட குஜராத் மதச் சுதந்திர சட்டம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு இருக்கிறது.மேலும், மதமாற்றம் செய்வதை தடுக்க மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற சட்ட விதிக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அந்த தடையை நீக்க வேண்டும் என்று குஜராத் அரசு கோரியது.

மத்திய அரசு அவகாசம்
இந்த சூழலில் பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாயா தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர். ஷா, ரவிகுமார் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அஷ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என எதிர்மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. கட்டாய மதமாற்றம் தொடர்பான மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உரிமை இல்லை என வழக்கறிஞர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம், அவ்வளவு நுட்பமாக செல்ல வேண்டாம். தீர்வு காண நாங்கள் இங்கு வந்துள்ளோம். நாங்கள் ஒரு காரணத்திற்காக இங்கே இருக்கிறோம் என்று தெரிவித்தனர். விஷயங்களைச் சரிசெய்ய நாங்கள் இங்கு வந்துள்ளோம்.

தேச பாதுகாப்புக்கு ஆபத்து
அறத்தின் நோக்கம் நல்லதாக இருந்தால் அது வரவேற்கத்தக்கது. ஆனால், நோக்கத்தை கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. இதை விரோதமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இது மிகவும் தீவிரமான பிரச்சினை. குறிப்பாக, இது நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. ஒவ்வொருவரும் இந்தியாவில் இருக்கும் போது, இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்ப செயல்பட வேண்டும். கட்டாய மத மாற்றம் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

பிரமாண பத்திரம்
குடிமக்களின் மத சுதந்திரத்தை பாதிக்கலாம். இந்த மிக தீவிரமான சிக்கலைச் சமாளிக்க மத்திய அரசு தலையிட்டு நேர்மையான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். ஏமாற்றி, மயக்கி, மிரட்டல் விடுத்து மேற்கொள்ளப்படும் மதமாற்றம் நிறுத்தப்படாவிட்டால் மிகவும் ஆபத்தான சூழ்நிலை உருவாகும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் மதமாற்ற ஒழிப்பு சட்டங்கள் பற்றி மாநில அரசுகளிடம் இருந்து விரிவான தகவல்களை சேகரித்து அதுபற்றி பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

கால அவகாசம்
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, கட்டாய மதமாற்றத்தை தடுக்க மாநில அரசுகளிடம் இருந்து தகவல்களை பெற்று வருகிறோம். இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் விரிவான மனுவை தாக்கல் செய்வோம். அதற்கு ஒரு வாரம் அவகாசம் தேவை என்று கோரினார். அதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.

வழக்கு தள்ளி வைப்பு
ஏற்கனவே இந்த வழக்கில் மத்திய அரசு ஒரு பதில் மனுவை தாக்கல் செய்திருந்தது. அதில், கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக மத்திய பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் இயற்றப்பட்டுள்ள சட்டத்தை ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்ம் உறுதி செய்ததை குறிப்பிட்டிருந்தது. ஒடிசா, மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், கர்நாடகம், அரியானா ஆகிய மாநிலங்களில் கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளதையும் மத்திய அரசு தனது பதில் மனுவில் தெரிவித்த நிலையில், இந்த வழக்கில் நேற்று மத்திய அரசு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
சமீப காலமாகவே, மதமாற்றம் விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு எதிராக, பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மதமாற்றம் என்பது சட்டப்படி செல்லும். ஆனால், கட்டாய மதமாற்றம் மட்டுமே சட்ட விரோதமான செயலாக கருதப்படுகிறது. இதே வழக்கு கடந்த நவம்பரில் விசாரணைக்கு வந்தபோது, கட்டாய மதமாற்றம் மிகவும் தீவிரமான பிரச்சினை. இதை தடுத்து நிறுத்தாவிட்டால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.