தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப்பாடல் என்பதை உணர்ந்து மதிப்பளிக்கிறோம் - ரிசர்வ் வங்கி விளக்கம்
டெல்லி: தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப்பாடல் என்பதை உணர்கிறோம் எனவும் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களை மதிக்கிறோம் எனவும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 73ஆவது குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவை ஒட்டி சென்னை பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலக வளாகத்தில் மூவர்ண கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது. அப்போது வங்கி அதிகாரிகள் பலர் எழுந்து நிற்காமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்ததாக கூறப்படுகிறது.
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை: 4 பேர் கொண்ட குழு அமைத்த பாஜக - சிபிஐ விசாரணை கேட்கும் வானதி சீனிவாசன்
இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு எதிராக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உறுதி அளித்திருந்தார்.

ஆன்லைன் மூலம் புகார்
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். அதில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர், எஸ்.எம்.என்.சாமி தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து விளக்கமளித்தார்.

ரிசர்வ் வங்கி விளக்கம்
இதனிடையே விரிவான அறிக்கை ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில், குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழிக்கு மரியாதை செலுத்துவதன் அடையாளமாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. எனினும் பின்னர் அதனை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் பாடல் குறித்து சற்றும் எதிர்பாராத மற்றும் வருந்தத்தக்க சில தேவையற்ற கூற்றுகள் எழுப்பப்பட்டன.

மாநிலபாடல்
தமிழ்த் தாய் வாழ்த்து தமிழ்நாட்டில் மாநில பாடல் என்பதை நாங்கள் உணர்கிறோம். ஒரு ஒழுங்கு முறைப்படுத்தும் அமைப்பு என்கின்ற முறையில் நாங்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பின்பற்றப்படும் பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை என்பதை மீண்டும் தெரிவிக்க விரும்புகிறோம்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
இந்திய ரிசர்வ் வங்கி சென்னை மண்டல அலுவலகத்தின் பிரதிநிதிகள் மண்டல இயக்குனர் எஸ்.எம்.எஸ்.சுவாமி தலைமையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை சந்தித்து இது தொடர்பான எங்கள் நிலைப்பாட்டை உறுதி செய்தனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.