டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்திய அடையாளம் சமஸ்கிருதம் இல்லை.. தமிழே மூத்த மொழி.. லோக்சபாவில் வெங்கடேசன் உணர்ச்சிகர பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆளுகிற அதிகாரம்தான் உங்களுக்கு.. நாட்டை பிளக்கிற அதிகாரம் இல்லை.. லோக்சபாவை அதிர வைத்த வெங்கடேசன்

    டெல்லி: இந்திய அடையாளமாக சமஸ்கிருதத்தை முன்வைத்தால், அதை எதிர்க்கும் முதல் குரலாக தமிழகம் இருக்கும் என்று, மதுரை லோக்சபா தொகுதி எம்.பியான சு.வெங்கடேசன் (மா.கம்யூ) லோக்சபாவில் பேசினார்.

    இந்தியா மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி சமஸ்கிருதம் என்று அமைச்சர் முன்வைத்தார். இதற்கு என்ன அறிவியல் ஆதாரம் இருக்கிறது என்ற கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன். ஒரு அமைச்சர் அறிவியல் பூர்வமாக கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புவார்கள்.

    சமஸ்கிருதத்தின் முதல் கல்வெட்டு ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் கிபி ஒன்றாம் நூற்றாண்டில் கிடைத்தது. ஆனால் தமிழ் மொழியில் மதுரை மாங்குளத்தில், தேனியின் புள்ளிமான் கோம்பையில் கிடைத்தது. இது கிமு ஆறாம் நூற்றாண்டு கல்வெட்டு. சமஸ்கிருத கல்வெட்டுக்கு 700 ஆண்டுகளுக்கு முன்பான தமிழ் கல்வெட்டு கிடைத்துள்ளது. இப்போது சொல்லுங்கள் எது மூத்த மொழி? நாங்கள் ஆதாரப்பூர்வமாகவே இதை சொல்கிறோம்.

    மக்களின் மொழி

    60,000 தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ளது. சமஸ்கிருதத்தில் 4000 கல்வெட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளன. சமஸ்கிருதம் தேவ பாஷை என்கிறார்கள். அது அவர்கள் நம்பிக்கை. ஆனால் தமிழ் மக்களின் மொழி என்பதில்தான் எங்களுக்கு பெருமை. சமஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளராவது உருவாகியிருக்கிறார்களா? ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கிய தமிழ் இலக்கியத்தில் 40க்கும் மேற்பட்ட பெண் எழுத்தாளர்கள் இருந்தனர். எனவேதான் இதனை மக்களின் மொழி என்று சொல்கிறோம். சமஸ்கிருதம் என்றுமே மக்களின் புழங்கு மொழியாக இருந்ததில்லை. அதுவரை சடங்கியல் மொழியாகவே இருந்தது.

    அரசு மொழி

    தமிழ், மக்களின் மொழியாக இன்றைக்கும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ், கனடாவில் அரசு மொழியாக இருக்கிறது. இது தேவ பாஷை என்று சொல்லவில்லை. ஆனால் உலகம் முழுக்க 10 கோடி தமிழர்களின் மொழி என்று சொல்கிறோம். தமிழ் என்பது சமய சார்பற்ற மொழி. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் ஒன்றில் கூட ஒரு மதமும், மத நிறுவனம் சார்ந்த அடையாளமும் இல்லை. பெரு மதங்கள் உருவாக்குவதற்கு முன்பாகவே செழித்தோங்கிய மொழி தமிழ் மொழி.

    முதல் குரல்

    அதே போல நம்முடைய நாடாளுமன்ற அமைச்சர், குறுக்கிட்டு, இந்த விவாதத்தை, தமிழ் மற்றும் சமஸ்கிருதம் நடுவேயான யுத்தமாக மாற்றாதீர்கள் என்றார். நாங்கள் எங்களைவிடவும் 700 வருடம் இளைய மொழியுடன் ஏன் சண்டை போட போகிறோம். ஆனால் சமஸ்கிருதம்தான் இந்திய பண்பாட்டின் அடையாளமாகவும், அறிவியலின் அடையாளமாகவும் மீண்டும் மீண்டும் சொல்ல முற்பட்டால், அதை எதிர்க்கும் முதல் குரலாக தமிழகம் இருக்கும் என்பதை பதிவு செய்ய விரும்புகிறோம்.

    மதசார்பற்ற நாடு

    மதசார்பற்ற நாடு

    தமிழகத்தில் உள்ள காந்திகிராம பல்கலைக் கழகத்தை மத்திய பல்கலைக்கழகமாக மாற்றாமல் விட்டு விட்டீர்கள். ஆனால் மற்ற மூன்று தனி நிகர் பல்கலைக்கழகங்களை மத்திய பல்கலைக் கழகமாக மாற்றி விட்டீர்கள். உங்களது பிரச்சனை, காந்தியா அல்லது தமிழகமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். காந்திகிராம பல்கலைக் கழகத்தை உடனடியாக மத்திய பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும். மைசூரில் இந்திய மொழி ஆய்வு மைய பல்கலைக்கழகம் உள்ளது. அது அனைத்து மொழிகளுக்குமானது. அதைப் போலத்தான் அனைத்து மொழிகளுக்குமான பல்கலைக்கழகம் இருக்க வேண்டுமே தவிர, ஒரே ஒரு மொழியை மட்டும் புனிதப்படுத்தி, உயர்த்திப் பிடிப்பது மதசார்பற்ற நாடு அழகு கிடையாது. இவ்வாறு வெங்கடேசன் பேசினார்.

    English summary
    Madurai Lok Sabha constituency MP Su Venkatesan spoke in the Lok Sabha, saying that if government presents Sanskrit as an Indian symbol, Tamil Nadu will be the first voice to oppose it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X