தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை: 4 பேர் கொண்ட குழு அமைத்த பாஜக - சிபிஐ விசாரணை கேட்கும் வானதி சீனிவாசன்
டெல்லி: தஞ்சாவூரில் படித்த பள்ளி மாணவி கடந்த வாரம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த மரணத்தில் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், மாணவியின் மரணம் குறித்து நேரில் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட தேசிய பாஜக சார்பாக 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த அரியலூர் மாணவி, சில தினங்களுக்கு முன்பு திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இவர் தங்கியிருந்த விடுதியில் வார்டன், அனைத்து அறைகளையும் சுத்தம் செய்ய சொன்னதால், மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றதாக அந்த மாணவி தனது மரணப்படுக்கையில் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. மாணவியின் மரணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில். விடுதியின் வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்டாலினை பாராட்டிய வானதி.. ஆனாலும் போற போக்கில் திமுகவுக்கு ஒரு இடி.. வைத்த முக்கிய கோரிக்கை..!

பாஜக போராட்டம்
மாணவியை மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தியதன் காரணமாக தான், விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டதாக பாஜக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும், மாணவியின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என கோரி பாஜக சார்பில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் போராட்டம் நடைபெற்றது.

கட்டாய மத மாற்றம் காரணமில்லை
இருப்பினும், மாணவியின் மரணத்திற்கு கட்டாய மத மாற்றம் காரணமில்லை என அரசு தரப்பிலும், பள்ளி நிர்வாகம் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாகவும் ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

4 பேர் கொண்ட குழு அமைப்பு
இந்நிலையில், தஞ்சை மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்த தேசிய பாஜக சார்பாக 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தஞ்சாவூரில் பள்ளி நிர்வாகத்தால் கட்டாய மத மாற்றத்துக்கு வற்புறுத்தப்பட்ட சிறுமி தற்கொலை செய்த கொண்டது கவலையும் வருத்தமும் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜே.பி. நட்டாவிடம் அறிக்கை
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்தியா ரே, எம்.பி, தெலுங்கானாவை சேர்ந்த விஜயசாந்தி, மகாராஷ்டிராவை சேர்ந்த சித்ரா தாய் வாக், கர்நாடகா கீதா விவேகானந்தா ஆகியோர் அடங்கிய குழுவை பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா அமைத்துள்ளார். அவர்கள் சம்பவ இடத்தில் நேரடியாக விசாரணை நடத்தி, அறிக்கையை விரைவாக சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

சிபிஐ விசாரணை தேவை
இந்த நிலையில் தஞ்சை மாணவியின் மரணத்திற்கு கட்டாய மதமாற்றம் காரணமில்லை என்பதை கூறும் வகையில் புதிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இதனிடையே மாணவியின் மரணம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக மகளிரணியின் தேசிய தலைவர் வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், மாணவி வழக்கை சிபிஜ க்கு மாற்ற வேண்டும், முதல்வர் இதில் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.